Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
கர்நாடகாவில், முடா முறைகேடு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அது எத்தனை கோடி தெரியுமா.?

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் நிலம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளார். மூடா வழக்கு என அழைக்கப்படும் இந்த வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறை, சித்தராமையாவின் சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது. அது எத்தனை கோடி என்பது குறித்து பார்க்கலாம்.
சித்தராமையாவின் ரு.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள பதிவில், மூடா வழக்கு தொடர்பாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் 2002-ன் கீழ், சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 92 அசையா சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், சித்தராமையாவைத் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களிடம் இருந்து, 400 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மூடா வழக்கு
கர்நாட மாநில அரசு, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்(MUDA) என்ற அமைப்பை செயல்படுத்தி வருகிறது. இதுதான் சுருக்கமாக மூடா என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியத்தின் சார்பில், முதலமைச்சர் சித்தராமையாவிற்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமான செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததற்கு நஷ்ட ஈடாகவே இந்த 14 வீட்டு மனைகளும் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்த பாஜக, இது குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, ஆளுநரின் உத்தரவின்படி, சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, லோக் ஆயுக்தா போலீசார் ஒருபுறமும், அமலாக்கத்துறை விசாரணை மறுபுறமும் என, சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
பதவிக்காக காத்திருக்கும் டி.கே. சிவக்குமார்
ஏற்கனவே முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே போட்டி இருந்துவந்தது. இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
இந்நிலையில், மூடா வழக்கில் சித்தராமையாவுக்கு சிக்கல் ஏற்படும் பட்சத்தில், அவர் பதவி விலக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி நேர்ந்தால், டி.கே. சிவக்குமாருக்கு, அவர் விரும்பியபடி முதலமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது வந்துள்ளதுபோல், வழக்கில் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகின்றன, தொடர்ந்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





















