US Marine in LA: போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு
கலிஃபோர்னியாவில் ஏற்கனவே பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அங்கு கூடுதலாக 700 கடற்படை வீரர்களை களமிறக்கியுள்ளார் ட்ரம்ப். இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.

கலிஃபோர்னியாவில், சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் அரசின் நடவடிக்கைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் அமைதியான முறையில் போராடினாலும், ட்ரம்ப் அங்கு படைகளை குவித்து வருவதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்து, வழக்கு கூட தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு கூடுதல் படைகளை ட்ரம்ப் களமிறக்கியுள்ளதால், பதற்றம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கூடுதலாக 2000 பாதுகாப்புப் படையினர், 700 கடற்படையினரை குவித்த ட்ரம்ப்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், மக்களின் போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே குவிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினரோடு, கூடுதலாக 2000 பேரை அங்கு களமிறக்கியுள்ளார் ட்ரம்ப். அவர்களுடன் சேர்த்து, 700 கடற்படையினரையும் களமிறக்கியுள்ளார். இவர்கள், ஏற்கனவே அங்கு குவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
US Marine என்று அழைக்கப்படும் இந்த கடற்படை வீரர்கள், அமெரிக்க கடற்படையின் ஒரு பிரிவாக இருந்தாலும், நகரங்களில் ஏற்படும் தீவிர கலவரங்களை கட்டுப்படுத்தவே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர். அதிதீவிரமான கலவரங்கள், வன்முறைகளை கையாள்வதில் இவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு
கூடுதல் பாதுகாப்புப்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் களமிறக்கப்பட்டதற்கு, கலிஃபோர்னாயா கவர்னர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசம் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இந்த கலவரத்தை அடக்க, மாகாண போலீசாரே போதும் என்றும், ஆனால், மாநில நிர்வாகத்தை மதிக்காமல், தேசிய பாதுகாப்புப் படையை ட்ரம்ப் அனுப்பியத தவறான செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் வெடித்தது எதனால்.?
அமெரிக்காவிற்குள், சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடியேறி வசித்து வருபவர்களை கண்டறிந்து, நாடு கடத்தும் நடவடிக்கையில் ட்ரம்ப் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ட்ரம்ப் உத்தரவின் பேரில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல இடங்களில் தீவிர சோதனை நடத்திவரும் தேசிய பாதுகாப்புப் படை, 40-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகளை கண்டறிந்து கைது செய்தது.
இதையடுத்து, ட்ரம்ப் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் மற்றும் கலிஃபோர்னியா கவர்னர் கவின் நியூசம் ஆகியோர், ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 3-வது நாளில், போராட்டம் நடத்தும் மக்களை ஒன்றுகூட விடாமல், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசாரும், தேசிய காவல்படையினரும் தடுத்தனர். அமைதியாக இருந்த கூட்டத்தை கலைக்க, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையில், பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு, நகரில் பதற்றம் ஏற்பட்டது.
ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு
இந்த நிலையில், கலிஃபோர்னியா கவர்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் போன்றோர், போராட்டங்களை கட்டுப்படுத்தத் தவறியதால், தேசிய பாதுகாப்புப் படையின் நடவடிக்கை தேவைப்பட்டதாக ;ட்ரம்ப் கூறினார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் வன்முறையாளர்கள் தப்பிக்கப் போவதில்லை என்றும், எல்லா இடங்களிலும் படைகள் இருப்பதாகவும், பைடன் ஆட்சியில் அமெரிக்கா சிதறியதைப் போல் தற்போது நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் ட்ரம்ப் கூறினார்.
அதோடு நிறுத்தாமல், லாஸ் ஏஞ்சல்ஸில் கூடுதலாக 2000 பாதுகாப்புப் படையினரையும், 700 கடற்படை வீரர்களையும் ட்ரம்ப் தற்போது களமிறக்கியுள்ளார். இதனால், அங்கு போர்க்களம் போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், 4-வது நாளில் அமைதியான பேரணியை போராட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் எங்கு போய் முடியும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.





















