Rahul Gandhi : "பணம் மறைவதில்லை.. ஐந்தாறு பேரின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது.." : ராகுல் காந்தி கடும் விமர்சனம்..
"இந்திய ஒற்றுமை நடைபயணம், ஒவ்வொரு அநீதிக்கும் எதிரானது" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கினார்.
आज बड़े उद्योगपतियों का अरबों का क़र्ज़ माफ़ किया जा रहा है।
— Rahul Gandhi (@RahulGandhi) September 26, 2022
लेकिन, अगर एक किसान या छोटा व्यापारी, छोटा सा भी क़र्ज़ न लौटा पाए तो उसे 'Defaulter' बता कर जेल में डाल देते हैं।
भारत जोड़ो यात्रा, हर अन्याय के खिलाफ़ है। राजा के ये ’दो हिंदुस्तान' भारत स्वीकार नहीं करेगा।
முதல் மூன்று நாட்கள் அவர் கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடினார். நடைபயணம் 19ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், 419 கிமீ தூரத்தை பயணம் திங்கள்கிழமை மாலை அடைந்தது.
கொப்பம் பகுதியில் நடைபயணத்திற்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, "விவசாயிகள் அல்லது சிறு வணிகர்கள் கடன் செலுத்தாததற்காக தண்டிக்கப்படும் அதே வேளையில் பணக்கார வணிகர்களின் கோடி கணக்கில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது போன்ற அநீதிகளுக்கு எதிராக இந்தப் பாத யாத்திரை நடைபெறுகிறது.
மத்திய பாஜக அரசு ஒரு சில பணக்கார தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதன் மூலம் அவர்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. அதே நேரத்தில் விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் பிற வணிகர்களுக்கு அதே அக்கறை காட்டுவதில்லை. இந்திய ஒற்றுமை நடைபயணத்தை பாஜக, ஆர்எஸ்எஸ் பிளவுப்படுத்த விரும்புகிறது. இரண்டுமே வெறுப்பை பரப்பி வருகிறது.
பாஜக - ஆர்எஸ்எஸ், இந்த நதியை (நடைபயணம்) பிரிக்க விரும்புகிறது. இங்கிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்ள விரும்புகிறது. யாராவது விழுந்தால், யாரும் தூக்கிச் செல்லாத, அனைவரும் தனியாக இருக்கும் நதியை அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டை பிளவுபடுத்தி வெறுப்பை பரப்புகிறார்கள்" என்றார்.
ராகுல் காந்தியை பார்ப்பதற்கு அலைகடலென திரண்டிருந்த மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "எல்பிஜி சிலிண்டர்களை வாங்கும் போதோ அல்லது வாகனங்களில் எரிபொருளை நிரப்பும் போதோ, கூடுதல் கட்டணம் எங்கே போகிறது என்று மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். பணம் மறைவதில்லை. நாட்டின் பணக்கார தொழிலதிபர்கள் ஐந்தாறு பேரின் பாக்கெட்டுகளுக்குப் போகிறது. இந்த அநியாயத்தை ஏற்க மாட்டோம்" என்றார். பின்னர், ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து ராகுல் காந்தி குறிப்பிடுகையில், "இன்று பெரும் தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், ஒரு விவசாயியோ அல்லது சிறு வியாபாரியோ சிறு கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவரை தவறானவர் என்று கூறி சிறையில் அடைக்கிறார்.
இந்திய ஒற்றுமை நடைபயணம், ஒவ்வொரு அநீதிக்கும் எதிரானது. மன்னரின் இந்த 'இரண்டு இந்தியாவை' நாடு ஏற்காது" என பதிவிட்டுள்ளார். காங்கிரஸின் 3,570 கி.மீ., 150 நாள் நீண்ட நடைபயணம் செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. செப்டம்பர் 10ஆம் தேதி, கேரளாவுக்குள் நுழைந்த நடைபயணம், அக்டோபர் 1ஆம் தேதி கர்நாடகாவில் நுழைகிறது.