Vice President: பாதியிலேயே ராஜினாமா செய்த குடியரசு துணை தலைவர் - அடுத்து யார்? 2வது மிகப்பெரிய பதவிக்கு ரேஸ்
VP Jagdeep Dhankhar Resigns: குடியரசு துணை தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததால் அடுத்து என்ன என்பது பொதுமக்களின் கேள்வியாக எழுந்துள்ளது.

VP Jagdeep Dhankhar Resigns: நாட்டின் மிக உயர்ந்த இரண்டாவது பதவியான குடியரசு துணை தலைவராக அடுத்து யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெகதீப் தன்கர் ராஜினாமா:
நாட்டின் குடியரசு துணைத் தலைவராக இருந்து வந்த ஜெகதீப் தன்கர் திடீரென நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த இடத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர் யார் என்பதே தற்போது பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது. 14வது குடியரசு துணைத் தலைவராக கடந்த 2022ம் ஆண்டு தன்கர் பொறுப்பேற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற உடனடியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
”உடனடி பதவி விலகல்”
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் 74 வயதான தன்கர் சமர்பித்த கடிதத்தில், “மருத்துவ பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 67(a)2-ன் படி இந்திய துணை குடியரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அவரது பதவிக்காலம் இன்னும் மூன்று ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், ராஜினாமா செய்ததால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான தேவை எழுந்துள்ளது. அரசியலமைப்பின் படி, தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான செயல்முறையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பு சொல்வது என்ன?
ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவராக பதவி ஆனது, மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காலியாகிவிட்டால், அரசியலமைப்புச் சட்டம் அந்தப் பதவியை "முடிந்தவரை விரைவில்" நிரப்ப வேண்டும் என்று கட்டளையிடுகிறது. இந்தத் தேர்தல், ஒற்றை மாற்றத்தக்க வாக்கு மற்றும் ரகசிய வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கி நடத்தப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையம் தாமதமின்றி தேர்தலை நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பொறுப்பேற்ற நாளிலிருந்து முழு ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவி வகிப்பார்.
குடியரசு துணை தலைவர் தேர்தல் - விதிகள், தகுதிகள்
தேர்தலில் போட்டியிட, ஒரு வேட்பாளர் இந்திய குடிமகனாகவும், குறைந்தபட்சம் 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு லாபகரமான பதவியையும் வகிக்கக் கூடாது.
நடைமுறை விதிகளின்படி, ஒரு வேட்பாளரை குறைந்தபட்சம் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்து, மேலும் 20 பேர் வழிமொழிய வேண்டும். வேட்பாளர் எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்தாலும், தேர்தல் அதிகாரியால் நான்கு வேட்புமனுக்கள் வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ரூ.15,000 பாதுகாப்பு வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் அறிவிக்கப்பட்டபடி, நியமிக்கப்பட்ட இடம், தேதி மற்றும் நேரத்தில் வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குடியரசு துணை தலைவரின் அதிகாரம்:
குடியரசு துணை தலைவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர ஆவார். இவர் மாநிலங்களவையின் அலுவல் ரீதியான தலைவராகவும் பணியாற்றுகிறார். எந்தவொரு அவையிலோ அல்லது எந்த மாநில சட்டமன்றத்திலோ உறுப்பினராக இல்லாவிட்டாலும், மாநிலங்களவையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் பராமரிப்பதில் துணைக் குடியரசுத் தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கூடுதலாக, குடியரசுத் தலைவரின் மரணம், ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது இயலாமை போன்ற நிகழ்வுகளில், புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொள்வார்.
தற்போது அந்தப் பதவி காலியாக இருப்பதால், கட்சி ரீதியாக அரசியல் ஆலோசனைகள் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க, மக்களவையிலிருந்து 543 உறுப்பினர்களும், மாநிலங்களவையிலிருந்து 245 உறுப்பினர்களும் அடங்கிய 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் என்று தெரிகிறது.





















