Shocking : திருவள்ளூர்: இரண்டு நாட்கள் தொடர்ந்து ஃப்ரீ ஃபயர் கேம்… மயங்கி விழுந்து உயிரிழந்த தொழிலாளி..
மேற்கு வங்கத்தில் இருந்து வந்து சென்னை செங்குன்றத்தில் வசித்து வேலை செய்துவரும் இளைஞர் ஒருவர்தான் இந்த கேமை இரண்டு நாட்கள் தொடர்ந்து விளையாடி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் மொபைலில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடிய நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் கேம்ஸ்
மொபைல் கேம்ஸ் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. சில கேம்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதாகவும், அடிமையாக்குவதாகவும் பல குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் உள்ளன. மேலும் ஆபத்தான பல கேம்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் தடை செய்யப்பட்ட வரலாறும் உண்டு. ப்ளூ வேல் என்ற மிகவும் ஆபத்தான கேம் ஒன்று குழந்தைகளை இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் விதமான கேமாக இருப்பதாக கண்டறியப்பட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது பலருக்கும் நினைவிருக்கும். அந்த கேமை அப்போது இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்தன.
தடை செய்யப்பட்ட கேம்கள்
வன்முறையை காரணம் காட்டி பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது. ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளும் கேமான அது மிகவும் பிரபலமான கேமாக இருந்தது. இந்தியாவில் தடை செய்யப்பட்டபின் கொரியன் வெர்ஷன், பைரேட் வெர்ஷன் என்று பல வெர்ஷன்கள் கிடைப்பதாக கூறப்பட்டாலும் பெரும்பாலும் அந்த கேம் விளையாடுவது குறைந்தது. ஆனால் அதே போலவே அப்படியே இருக்கும் ஒரு கேம்தான் ஃப்ரீ ஃபயர். பப்ஜி இருக்கும்போதே ஓரளவுக்கு பிரபலமாக இருந்த அந்த கேம், பப்ஜி தடை செய்யப்பட்ட பிறகு மேலும் பிரபலமடைந்தது.
ஃப்ரீ ஃபயர் கேம்
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதுபோல அந்த கேம் இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் பரவியது. அந்த கேம் மீதும் பல வழக்குகள் தடை செய்யச்சொல்லி நிலுவையில் உள்ளன. ஆனால் எந்தவித தடையையும் இதுவரை சந்திக்காத அந்த கேம் ஒருவரின் வாழ்வை பறித்துள்ளது. சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் இருந்து வந்து சென்னை செங்குன்றத்தில் வசித்து வேலை செய்துவரும் இளைஞர் ஒருவர்தான் இந்த கேமை இரண்டு நாட்கள் தொடர்ந்து விளையாடி மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர்
23 வயதாகும் ஹரிதான் பவுரி என்னும் நபர் சென்னை செங்குன்றத்தில் தங்கி ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த நபர் திருவள்ளூரில் உள்ள மப்பேடு பகுதியில் உள்ள மேட்டுச்சேரி என்னும் இடத்திற்கு அவரது அண்ணன் மகசர் பவுரி வசிக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். விடுமுறை என்பதால் முழு நேரமும் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே இருந்துள்ளார். வேளா வேளைக்கு சாப்பாடும் சாப்பிடாமல் தொடர்ந்து கேம் விளையாடி வந்துள்ளாளர். ஞாயிற்றுக் கிழமை காலையில் விளையாட துவங்கிய அவர் திங்கட்கிழமை மாலை வரை தொடர்ச்சியாக தூக்கம் கூட இல்லாமல் விளையாடியுள்ளார். அப்போது விளையாடிக்கொண்டிருக்கும்போதே திடீரென சுருண்டு மயங்கி விழுந்துள்ளார். பதறி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மப்பேடு காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.