MK Stalin: தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னையில் ACMEE 2025 சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை துவக்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் முதலீடுகளை மேற்கொள்ள பல்வேறு நாடுகள் தமிழகத்தை நம்புவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், இன்று முதல் நடைபெறும் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் பேசிய அவர், தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தமிழகம் மீதும், சென்னை மீதும் உலக நிறுவனங்கள் வைத்துள்ள மதிப்பின் வெளிப்பாடு, கண்காட்சியில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம் தெரிவதாகவும் கூறினார். அவர் பேசியதன் முக்கிய தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
“தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு“
இந்தியாவின் உற்பத்தித் துறையின் மொத்த உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.9 சதவீதம் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3-வது இத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் குறைவு என அவர் கூறினார்.
“முதலீடுகளுக்கு தமிழகத்தை நம்பும் உலக நாடுகள்“
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தொழில் முதலீடுகளுக்கு தமிழகத்தின் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தமிழகத்தின் மீதும், சென்னை மீதும் உலக நாடுகள் வைத்துள்ள மதிப்பின் வெளிப்பாட்டால், கண்காட்சியில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் 435 நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
“தொழிற்சாலையில் அதிகளவில் பெண்கள் - தமிழகம் முதலிடம்“
மேலும், தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோரில், பெண்களின் அளவு 30 சதவீதம் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழிற்சாலையில் அதிக அளவில் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழ்நாடே முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவில், பதிவு செய்த பெண் தொழிலாளர்களில், 42 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
“தொழிலாளர் நலனுக்கு முக்கிய பணிகளை செய்துள்ள திமுக“
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தொழில் வளர்ச்சி, தொழிலாளர் நலனுக்கு, திமுக அரசு முக்கியமான பணிகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
எம்எஸ்எம்இ-க்கு என தனிப்பட்ட கொள்கை, 4 ஆண்டில் மின் மானியம், ஊதிய மானியம் என 1000 கோடி ரூபாய்க்கு மேல் மானியம் தரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், ஏற்றுமதி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.



















