அம்மாவோட கடைசி ஆசை.. உயிரிழந்த தாயின் உடலை மருத்துவமனைக்கே தானமாக வழங்கிய மகள்கள்..!
சிறுநீரக கோளாறால் உயிரிழந்த தாயின் உடலை மருத்துவமனைக்கே தானமாக அவரது மகள்களே வழங்கிய சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ளது ராமானுஜம் நகர். இங்கு உள்ளது ஒத்தவாடை பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி மீனா. முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவர் மரணத்திற்கு பிறகு அவரது அச்சகத்தொழிலை மீனா முன்னெடுத்து நடத்தி வந்தார். முருகானந்தம் – மீனா தம்பதியினருக்கு காயத்ரி மற்றும் சுவாதி என இரு மகள்கள் உள்ளனர இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
முருகானந்தம் மறைவிற்கு பிறகு தனி ஆளாக அச்சகத்தொழிலை நடத்தி வந்த மீனாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவரது சிறுநீரகம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் பிழைப்பது கடினம் என்றும் தெரியவந்தது.
மீனா முற்போக்கான கருத்துக்களையும், சிந்தனைகளையும் கொண்டவர் என்பதால், தன்னுடைய மரணத்திற்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது. பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் வகையில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட வேண்டும் என்று தனது மகள்களிடம் சத்தியம் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாவின் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மீண்டும் தனது மகள்களிடம் தனது உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார்.
அவரது கடைசி ஆசைப்படி அவரது உடலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரது மகள்கள் வழங்கினர். தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது உடலை, அவர் உயிரிழந்த மருத்துவமனைக்கே மகள்கள் தானமாக வழங்கிய செயல் மருத்துவமனையில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பொதுவாக மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் உயிரிழந்தவர்களின் உடல்களில் உள்ள முக்கிய உறுப்புகளாகிய கண்கள், இதயம், மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகள் தனியாக பிரிக்கப்பட்டு எந்த நோயாளிக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு சிகிச்சை மூலம் பொருத்தப்படும். தானமாக உடல்களே வழங்கப்படுவது என்பது மிகவும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வாகவே இருந்து வருகிறது. தாயின் உடலையே தானமாக வழங்கிய மகள்களை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் பாராட்டியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்