தஞ்சாவூர் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி! விளைச்சல் அதிகரிக்க முக்கிய வழிமுறைகள்!
விவசாயிகளுக்கு தரமான சான்றுப் பெற்ற அதிக முளைப்புத் திறன். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உடைய விதை உற்பத்தி செய்து தரும் பணியினை விதைச்சான்றுத் துறை செய்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி செய்திட புத்தூட்ட பயிற்சி விதைச்சான்றளிப்பு மற்றம் உயிர்மச்சான்றளிப்பு துறை மூலமாக அளிக்கப்பட்டது.
நோய் எதிர்ப்பு திறன் உடைய விதை
விவசாயிகளுக்கு தரமான சான்றுப் பெற்ற அதிக முளைப்புத் திறன். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் உடைய விதை உற்பத்தி செய்து தரும் பணியினை விதைச்சான்றுத் துறை செய்து வருகிறது. இப்பயிற்சியில் விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா நல்ல தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பதே அதிக விளைச்சலுக்கு மிக அவசியமானது ஆகும் ஆகையால், தரமான விதை உற்பத்தி செய்திடுமாறு தலைமையுரை வழங்கினார்.

வேளாண்மை துணை இயக்குநர் சாருமதி, (மாநில திட்டம்)
கூறுகையில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்றவாறு ரகங்களை தேர்வு செய்து தரமான விதையினை உற்பத்தி செய்து தருமாறு கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) மாலதி பேசியதாவது: வேளாண்மைக்குத் தேவையான அனைத்து இடுபொருட்கள் இருந்தபோதிலும் தேர்வு செய்யக்கூடிய விதை சரியாக இல்லை என்றால் விளைச்சல் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகும். ஆகையால், விதை உற்பத்தியின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட விதை உற்பத்தியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
விதை சான்றளிப்பு
விதை சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் புத்தூட்ட பயிற்சியில் கலந்து கொண்ட தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு சம்பா, தாளடி மற்றும். கோடை நெல் சாகுபடிக்கு மட்டும் விதை நெல்லின் தேவை ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேலாக தேவைபடுவதால் அதிகமான பரப்பளவில் தரமான விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட வேண்டும்.
விதை பண்ணை
இதனை கருத்தில் கொண்டு எதிர் வரும் பருவத்திற்கு இம்மாவட்ட விவசாயிகளின் விதை தேவையை பூர்த்தி செய்ய 8500 எக்டர் பரப்பளவில் விதை பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விதை உற்பத்தி பண்ணை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், முன்னோடி விவசாயிகள் விதை உற்பத்தியில் இணைந்து கொண்டு அதிக வருமானம் பெறும் தொழிலாக மாற்றும் வாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார்.
மேலும், புது டெல்லியில் உள்ள வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள விதைக்கான பிரத்யோக இணையதளத்தில் விவசாயிகள் எவ்வாறு விதைப்பண்ணை பதிவுகளை மேற்கொள்வது மற்றும் விதைச் சான்றளிப்பு துறையினரால் மேற்கொள்ளப்படும் வயல் ஆய்வுகள் மற்றும் உண்மை தன்மை அறியும் முறை குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கினார்.
விதைச்சான்று
காட்டுத்தோட்டம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். பார்த்திபன் கூறுகையில், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்து விதை உற்பத்தி செய்திட விதை உற்பத்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார். விதைச்சான்று அலுவலர் பிரபு விதை உற்பத்திக்கு தேசிய அளவில் அமைக்கப்பட்டுள்ள தனி இணையதளம் (SATHI Seed Traceability Authentication and Holistic Inventory) விதை தரமறிதல் அங்கீகாரம் மற்றும் முழுமையான விதை இருப்பு காண்காணிப்பு இணையதளம் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் விதைப்பண்ணை பதிவு, வயல் ஆய்வு, முத்திரை இடுதல், சுத்திப்பணி, அறிக்கை பெறுதல் குறித்தும் இப்பயிற்சியில் தெளிவாக எடுத்துக் கூறினார். இப்பயிற்சியில் தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) இந்திரஜித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த பயிற்சியில் பெரும்பாலான விதை உற்பத்தி செய்யும் தனியார் விதை உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், அனைத்து விதைச் சான்று அலுவலர்கள், விதை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். விதை சான்று அலுவலர் மணிமேகலை வரவேற்புரை வழங்கினார். விதைச் சான்று அலுவலர் (தொ.நுட்பம்) ஹசீனா பேகம் நன்றியுரை வழங்கினார்.





















