37 ஓட்டுகள் போதும்.. திமுகவை தோற்கடிச்சுடலாம் - நயினார் நாகேந்திரன் கணக்கு இதுதான்!
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியை சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க 37 வாக்குகள் போதும் என்று வியூகம் வகுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்சி வலுவாக உள்ளது என்பதை நிரூபிக்க பூத் கமிட்டி என்பது மிக மிக அவசியம் ஆகும்.
பூத் கமிட்டி:
அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக-விற்கு மட்டுமே பூத் கமிட்டி மாநிலம் முழுவதும் வலுவாக உள்ளது. மற்ற கட்சியினருக்கு பல இடங்களில் பூத் கமிட்டிக்கான முகவர்கள் கூட இல்லை என்பதே உண்மை. அந்த வகையில், தேசிய கட்சியான பா.ஜ.க.விற்கே இதுதான் நிலைமை.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமயில் பாஜக பூத் கமிட்டியை வலுப்படுத்துவதற்கான பயிலரங்கம் நேற்று நடந்தது. அதில் பேசிய நயினார் நாகேந்திரன் திமுக-வை வீழ்த்த பூத் கணக்கு ஒன்றை நிர்வாகிகளுக்கு கூறினார்.
37 ஓட்டுதான் வித்தியாசம்:
அதாவது, ஒரு தொகுதிக்கு 300 பூத் இருக்கும். ஒரு பூத்திற்கு 12 பேரை சேர்க்க வேண்டும். இந்த கணக்கில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரத்து 600 பேரை பூத் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்த்தால் 2026 சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரும். உள்துறை அமைச்சர் அதற்கான வியூகத்தை பார்த்துக் கொள்வார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வாக்குகளையும், திமுக வாக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 24 லட்சம் வாக்குகளே வித்தியாசம் ஆகும். இதன்படி, ஒரு பூத்திற்கு 37 வாக்குகள் அதிகமாக பெற்றாலே நாம் சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம். இதை கவனத்தில் வைத்து செயல்பட்டால் வெற்றி பெற்று விடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நயினார் நாகேந்திரன் கூறிய கணக்கு என்பது நடைமுறையில் செயல்படுத்துவதற்கு பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் உள்ளது. திமுக, அதிமுக-விற்கு போட்டியாக தமிழ்நாட்டின் மாநில கட்சியான நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம், பாமக, விசிக என பெரிய கட்சிகள் பட்டியலே உள்ளது.
வலுவான கூட்டணியை உருவாக்குமா அதிமுக?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசிய கட்சிகளை காட்டிலும் மக்கள் மாநில கட்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிப்பது வழக்கம். அதனால், பெரும்பாலாேனோர் தேசிய கட்சிகளில் இணைவதை காட்டிலும் மாநில கட்சிகளில் இணைவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக பல கிராமங்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக-விற்கு உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ இல்லாமல் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. நயினார் நாகேந்திரன் போடும் கணக்கும், வியூகமும் நடைமுறையில் பா.ஜ.க.வினரால் எந்தளவு செயல்படுத்தப்படுகிறது என்பதை சட்டமன்ற தேர்தலின் முடிவில் தெரிந்துவிடும்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் பாமக, தமாக ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன. ஆனாலும், ஆளுங்கட்சியான திமுக-வை வலுப்படுத்த அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டியது மிக மிக அவசியம் என்பதால் கூட்டணியில் மற்ற கட்சியினரையும் உள்ளே கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.




















