நீங்க யாரு..? போக்குவரத்து அமைச்சரிடமே கேள்வி கேட்ட அரசுப்பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் - கரூரில் சம்பவம்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் யார் என்றே தெரியாமல் அவர் கேட்ட கேள்விகளுக்கு ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பதில் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாட்டின் அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய பல ஊர்களில் இருந்து பல ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
உணவகங்களில் நிறுத்தப்படும் பேருந்துகள்:
அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகள் உணவு, தேநீர் அருந்துவதற்காக சில இடங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அதற்கு என்று அரசு சார்பில் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பல அரசுப் பேருந்துகள் தரமற்ற, அதிக விலைக்கு உணவுகள் விற்கும் கடைகளில் பேருந்துகளை நிறுத்துவதும் நடந்து வருகிறது. இதுதொடர்பாக, பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாயனூர் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது வாகனத்தை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த இடத்தில் இரண்டு அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு இருந்தது.
அமைச்சர் திடீர் கேள்வி:
அப்போது, பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளனர். அவர்களிடம் அரசாங்கம் ஒதுக்கியுள்ள இடத்தில் பேருந்தை நிறுத்தாமல் இங்கு நிறுத்தியுள்ளீர்கள். நான் டீ சாப்பிட்டேன், அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட இங்கு அதிகமாக உள்ளது. அந்த ஹோட்டலில் பேருந்தை நிறுத்தினார்கள் என்று சொன்னால், நீங்கள் பதில் சொல்வீர்களா? அல்லது அரசு பதில் சொல்லுமா? என்று கேட்டார்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாயனூர் சுங்கச்சாவடி அருகில் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் நிறுத்தாமல் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்தினர்களிடம் அறிவுரை வழங்கிய போது. pic.twitter.com/j5KEMujNQ1
— Sivasankar SS (@sivasankar1ss) July 6, 2025
அவர் அமைச்சருக்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் சாதாரண சட்டை, பேண்ட் அணிந்து பயணி போல இருந்தார். இதனால், அமைச்சரை பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மற்றும் பயணிகள் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
யாரென்றே தெரியாத ஓட்டுனர்களும், நடத்துனர்களும்:
பின்னர், அங்கிருந்த ஒரு ஓட்டுனரிடம் எந்த டிப்போ? என்றும், எத்தனை ஆண்டுகள் சர்வீஸ் என்றும் கேட்டார். மேலும், நீங்க மட்டும் சாப்பிட்டால் முதலமைச்சருக்கு யார் பதில் சொல்வது? இதுதான் பிரச்சினை. உங்கள் இஷ்டத்திற்கு நடவடிக்கை எடுக்குறது. பொதுமக்களிடம் பிரச்சினை வந்தால் அரசாங்கம் பதில் சொல்லனும் என்றார்.
அப்போது, நடத்துனர் ஒருவர் யாரும் சொல்லல என்று பதில் கூறினார். அதற்கு அமைச்சர் உங்க இஷ்டத்துக்கு நிறுத்துகிறீர்கள்? என்றார். பின்னர், நீங்க யாரு? எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க? என்று கேட்டுள்ளனர். இதனால், மேலும் அமைச்சர் மிகவும் ஆச்சரியப்பட்டு, என்னையே தெரியவில்லையா? என்று கேட்டுள்ளார். அவர்கள் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
அட்வைஸ் செய்த அமைச்சர்:
அதற்கு அமைச்சர் சிவசங்கர், நான்தான்பா உங்க துறைக்கே அமைச்சர் என்று கூறியுள்ளார். இதனால், அந்த பேருந்து ஓட்டுனர்களும், நடத்துனர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், சாரி சார், எங்களை மன்னித்துவிடுங்கள். யாரென்று தெரியாமல் பேசிவிட்டோம் என்று கூறியுள்ளனர். பின்னர், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டும் பேருந்தை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி புறப்பட்டுச் சென்றார்.
இந்த வீடியோவை அமைச்சர் சிவசங்கரே தனது எக்ஸ் மற்றும் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.





















