Kick Movie Review: டிடி ரிட்டர்ன்ஸ் மாதிரி இல்ல.. வேற மாதிரி.. என்ன மாதிரின்னு தெரியுமா? சந்தானத்தின் ‘கிக்’ பட முழு விமர்சனம்!
Kick Movie Review in Tamil: "டிடி ரிட்டர்ன்ஸ் உடன் இந்தப் படத்தை ஒப்பிட வேண்டாம் , கிக் வேற மாதிரி இருக்கும்" என சந்தானம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடி கிக் வேற மாதிரி இருந்ததா?

Prashant Raj
Santhanam Tanya Hope Thambi Ramaiah Brahmanandam Kovai Sarala Manobala Senthil Vaiyapuri
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம், தான்யா ஹோப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள கிக் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கு, ரசிகர்களைக் கவர்ந்ததா எனப் பார்க்கலாம்!
கதை
விளம்பரப் படம் எடுக்கும் போட்டி கம்பெனிகளைச் சேர்ந்தவர்கள் மனோபாலாவும் தம்பி ராமையாவும். மனோபாலாவுக்காக நடிகை தான்யா ஹோப் (ஷிவானி) பணிபுரிகிறார். தம்பி ராமையாவுக்காக நடிகர் சந்தானம் (சந்தோஷ்) பணிபுரிகிறார்.
இவர்களில் எந்தவித கொள்கை, எத்திக்ஸூம் இல்லாமல் காண்ட்ராக்டைகளை தன் கம்பெனி வசப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பணிபுரியும் சந்தானம், தங்கள் போட்டி கம்பெனியின் திறமையான நேர்மையான நாயகியான தான்யா ஹோப்பை கண்ட நொடியிலேயே காதலில் விழுகிறார். ஆனால், பொய் புரட்டு என வேலை செய்து தங்கள் ஆர்டர்களைத் தட்டிப் பறிக்கும் சந்தானத்தை நேரில் பார்க்காமலேயே வெறுப்பதுடன், அட்வர்டைஸ்மெண்ட் ஃபிலிம் கவுன்சிலில் சந்தானம் மீது புகார் கொடுக்கவும் செய்கிறார் தான்யா ஹோப்.
இந்தப் புகார்களில் சிக்காமல் கோல்மால் செய்து ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகும் சந்தானம், தான்யாவுடம் வேறொரு பெயரில் பழகி, தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார். தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில் தான்யா தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார். இதனைத் தொடர்ந்து நடப்பது என்ன, தொழில் போட்டிகளுக்கு இடையே இவர்களது காதல் என்ன ஆனது என்பதே மீதி கதை.
இப்படி பண்ணிட்டீங்களே சந்தானம்...
கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜூம் படத்தை தமிழில் கிக்காக ரீமேக் செய்திருக்கிறார்கள். டிடி ரிட்டர்ன்ஸ் மூலம் கடந்த மாதம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்த சந்தானத்தை நம்பி படத்துக்கு போனால் நிலைமை அதோகதி!
‘ஹீரோ’ சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடி, பாடிலேங்குவேஜ் சகிதம் தன் ட்ரேட்மார்க் முத்திரையுடன் தனக்கு தரப்பட்ட வேலையை கூட, குறைய இல்லாமல் செய்திருக்கிறார். முதலில் தெளிவான ஹீரோயினாக கவனமீர்த்து என்ட்ரி தரும் தான்யா ஹோப், கதை ஓட்டத்தில் மக்கு ஹீரோயினாக உருவெடுத்து நம்மை நோகடிக்கிறார்.
காமெடி ப்ளாட்டை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், செந்தில், வையாபுரி என எண்ணிக்கையிலடங்காத காமெடி நட்சத்திரப் பட்டாளம். ஆனால் பாதி பேர் காமெடி எனும் பெயரில் வெறுப்பேற்றுகிறார்கள். தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் பாதி நேரம் எரிச்சலூட்டவும் ஆபாச ஜோக்குகளை அள்ளித் தெளிக்கவுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
காமெடி இருக்கா, இல்லையா...
வயதான வ்ளாகர், ரீல்ஸ் அடிக்ட் என அதகளமாக என்ட்ரி கொடுத்து ஆங்காங்கே சிரிக்க வைத்து கோவை சரளா நமக்கு ஆறுதல் அளிக்கிறார். செந்திலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை ஆனால் நல்லவேளையாக தம்பி ராமையா போல் வெறுப்பேற்றவில்லை. மனோபாலா ஆங்காங்கே திரையில் தோன்றி தன்னை மிஸ் செய்ய வைக்கிறார்.
காமெடி கதைக்களம், பொய்களை அடிப்படையாக வைத்து காலம் கழிக்கும் நாயகன் என கதை அமைத்ததுடன் அதையே சாக்காக வைத்து அத்தனை லாஜிக் மீறல்கள்! அதற்கு மேல் திரைக்கதை இந்தியா, பாங்காக் என தேமேவென்று தன்பாட்டுக்கு பயணிக்கிறது. முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காமெடிகளையும் படம் முழுவதும் தூவிக் கொண்டே இருக்கிறார்கள்.
பொய், புரட்டு, ஃபோர்ஜெரி செய்யும் ஹீரோவாக படம் முழுவதும் வலம் வரும் சந்தானம், “விளம்பரத்தை ப்ரொமோட் செய்வதற்காக எத்தனை பொய் சொல்கிறோம், அதுபோல் நம் காதலை ப்ரொமோட் செய்ய பொய் சொன்னேன்” என சீரியஸ் வசனம் பேசுவது நகை முரண். இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யாவின் இசை படத்தின் பெரும் ஆறுதல்.
“டிடி ரிட்டர்ன்ஸ் உடன் இந்தப் படத்தை ஒப்பிட வேண்டாம் , கிக் வேற மாதிரி இருக்கும், இதை சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த்ராஜ் படம் என்றுதான் சொல்ல வேண்டும்” எனக் கூறி ஏற்கெனவே சந்தானம் விமர்சனங்களில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

