Covid Positive During Pregnancy | கொரோனா அச்சமா? கர்ப்பிணி பெண்களின் எல்லா சந்தேகங்களுக்கும் தீர்வுகள் இங்கே!
சிறிய அளவிலான அறிகுறிகள் தெரியும்போதே பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்வது கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும். நோயைத் தீவிரமடையவிடாமல் ஐ.சி.யூ, ஆக்சிஜன் படுக்கை போன்ற அவசரகாலச் சிகிச்சைகளையும் இதன்வழியாகத் தவிர்க்கலாம்.
கொரோனா இரண்டாம் அலை கருவுற்றிருக்கும் பெண்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் கவலை அதுவல்ல, அப்படி பாதிக்கப்படுபவர்கள் சிலரில் நோயின் தீவிரத்தன்மை அதிகமாகவும் தென்படுகிறது. தரவுகளின்படி இந்த இரண்டாம் அலை காலத்தில் RT-PCR பரிசோதனை செய்யப்படும் மூன்றில் ஒரு கருவூற்றிருக்கும் பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகிறது.அவர்களுக்கு குறைந்தபட்சம் 50 % அளவுக்கேனும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால் கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் கொரோனா பாதிப்பு குறித்து பயப்படவேண்டாம் என்கிறார் மகப்பேறு மற்றும் மனநல ஆலோசகர் டீனா அபிஷேக். அவருடனான ABP Nadu பேஸ்புக் லைவ் உரையாடலில் நாம் கேட்ட கேள்விகளும் அவரது விளக்கங்களும்…
1. கொரோனா இரண்டாவது அலை குழந்தைகளுக்கும் கருவூற்றிருக்கும் பெண்களுக்கும் மிகவும் ஆபத்தா?
முதல் அலையை விட இரண்டாம் அலை சமூகப்பரவல் அதிகமாக இருக்கு. அதனால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் சிறிய அளவிலான அறிகுறிகள் தெரியும்போதே பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொள்வது கொரோனாவின் வீரியத்தைக் குறைக்கும். நோயைத் தீவிரமடையவிடாமல் ஐ.சி.யூ, ஆக்சிஜன் படுக்கை போன்ற அவசரகாலச் சிகிச்சைகளையும் இதன்வழியாகத் தவிர்க்கலாம். வெறும் இருமல்தான் என அலட்சியமாக இருக்கவேண்டாம். RT-PCR சோதனை செய்ய பயப்படக்கூடாது.அறிகுறிகள் தெரியும்போது வீட்டிவைத்தியம் செய்வதை நிறுத்திவிட்டு உடனடியாக மருத்துவரை அணுகவும்.
- கொரோனா தொற்று கர்ப்பிணிகளில் கருவை பாதிக்குமா?
முதல் அலை காலத்தில் கருவை பாதித்ததாக எந்த டேட்டாவும் இல்லை. ஆனால் இரண்டாம் அலைக் காலத்தில் அப்படிச் சொல்லமுடியாது. ஆனால் நோய் அறிகுறிகள் தெரிந்ததுமே உடனடியாக பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக்கொண்டு 2 வாரங்களில் ஆரோக்கியமாக வீடு திரும்பிய கர்ப்பிணிப் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 99 சதவிகிதம் வரை நோய் குணப்படுத்தப்பட்டுவிடுகிறது.அறிகுறிகள் தெரிந்ததும் நாம் அலட்சியம் காட்டாமல் டெஸ்ட் செய்ய பயப்படாமல் உடனடியாக மருத்துவரிடம் செல்வதைப் பொருத்துதான் எல்லாமும் இருக்கு. - Asymptomatic -அறிகுறிகள் தென்படாத கொரோனா பாசிடிவால் கர்ப்பிணிகளுக்கோ அல்லது கருவுக்கோ ஆபத்தா?
கொரோனா காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என டாக்டர்களே அறிவுறுத்துகிறார்கள்.ஆனால் அதையும் கடந்து மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய சூழலில் இருப்பவர்கள், வீட்டில் யாருக்கேனும் கொரொனா பாசிட்டிவ் உறுதியாகியிருக்கும் நிலையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் தாங்களும் டெஸ்ட் எடுத்துக்கொள்வது நல்லது.இதுவரை பரிசோதனை செய்த பெண்களில் குறைந்த பட்சமாவது அறிகுறிகள் தெரிகிறது என்பதுதான் ஆறுதல் அளிக்கும் விஷயம். அறிகுறிகள் நமக்கான அலாரம்.உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும். - அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகச் செய்யவேண்டியது என்ன?
முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் இருப்பவர்கள், கொரோனா பாசிட்டிவ் எனத் தெரியவரும்போது உடனடியாக ஆன்லைனில் மருத்துவரை அணுகவும்.அவர்கள் சில ரத்தப்பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்கள்.அதையுமே வீட்டுக்கே வந்து மாதிரிகள் எடுத்துச் செல்லும் பரிசோதனை மையங்கள் ஆன்லைனில் இருக்கின்றன. பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகு மருத்துவர் சொல்லும் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும். தாமாகவே சின்கோவைட் போன்ற மருந்துகளைச் சாப்பிடக் கூடாது.
கருவூற்றிருப்பவர்கள் வெறும் இருமல்தான் என அலட்சியமாக இருக்கவேண்டாம். RT-PCR சோதனை செய்ய பயப்படக்கூடாது.
- கொரோனா கருவில் இருக்கும் குழந்தைக்கோ அல்லது பிறந்த குழந்தைக்கோ வருவதை தடுக்க முடியுமா?
கருவில் இருக்கும் குழந்தை பாதிக்கப்படும் என்பதையே மிக அண்மையில்தான் கண்டுபிடித்துள்ளார்கள். அதனால் தடுக்கமுடியுமா என்பதைப் பற்றி இதுவரை எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பிறந்த குழந்தை தாய் வழியாக பாதிக்கப்படாதான் வாய்ப்புகள் அதிகம்.தாய் மருத்துவரை அறிவுரையின் பேரில் மாஸ்க் அணிவது சானிடைஸ் செய்துகொள்வது தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பதைச் செய்யலாம்.
- கொரோனா பாதிக்கப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுக்கலாமா? தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தடுப்பூசி போட்டுக்கலாமா?
தாய்ப்பால் வழியாகக் குழந்தைக்கு நோய் பரவும் என எந்த ஆய்வும் சொல்லவில்லை. அதன் வழியாக எந்த தொற்றும் பரவாது. கொரோனா அச்சத்தில் இருப்பவர்கள், தொற்று அறிகுறிகள் தென்படுபவர்கள் பம்ப் வழியாக தாய்ப்பால் எடுத்து வேறொருவரிடம் கொடுத்து குழந்தைக்குத் தரச்சொல்லலாம்.
7. கருவூற்றிருக்கும் பெண்கள் டபுள் மாஸ்க் உபயோகப்படுத்தலாமா?
கட்டாயம் உபயோகப்படுத்தவேண்டும். வீட்டுக்குள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் செல்லும்போது சாதாரண மாஸ்க் உபயோகிக்கலாம். ஆனால் வெளியே செல்லும்போது இரட்டை மாஸ்க்தான் உபயோகிக்க வேண்டும். மூச்சுவிடுவது தொடக்கத்தில் சிக்கலாகதான் இருக்கும்.ஆனால் அது ஆபத்து இல்லை. கொரோனாவால் பாதிக்கப்படுவதை விட டபுள் மாஸ்க் அணிந்துகொண்டு வரும்முன் காப்பது நல்லது.
8.பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அது கொரோனாவா அல்லது சாதாரண காய்ச்சலா என்பதை கண்டறிய முடியுமா?
அதுதொடர்பான எந்தவித ஆராய்ச்சியும் இல்லை.ஆனால் வெளியே கொரோனா பாதிப்புச் சூழலில் குழந்தை எக்ஸ்போஸ் ஆகியிருந்தால் மட்டும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்வது நல்லது மற்றபடி குழந்தைகளுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய தேவையில்லை.
கருவூற்ற பெண்களில் மற்றும் குழந்தைபெற்ற தாய்மார்களில் கொரோனா பாதிப்பு குறித்த மேலதிக சந்தேகங்களுக்கான விளக்கங்களைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைக் ’க்ளிக்’ செய்யவும்.