Thirumavalavan: அதிகரித்த டிமாண்ட்.. எங்களுக்கு இத்தனை சீட்டு வேணும்.. திமுக-விடம் திருமா கேட்பது இதுதான்!
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக ஆட்சிகளுடன் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் களத்தில் இருப்பதால் விறுவிறுப்பு உண்டாகியுள்ளது.
திருமாவளவனின் முக்கியத்துவம்:
இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் யார் பலமான கூட்டணியை அமைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலில் விசிக-வின் செல்வாக்கும், வாக்கு சதவீதமும் அதிகரித்து வருகிறது.
புதியதாக கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள நடிகர் விஜய், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கே கூட்டணி அழைப்பு விடுப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் வெளிப்படையாக கூட்டணி அறிவிப்பு விடுத்தது விசிக தலைவர் திருமாவளவனுக்கு மட்டுமே ஆகும்.
அதிக தொகுதிகள்:
தற்போதைய திமுக கூட்டணியிலும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என விசிக-வை காட்டிலும் மூத்த கட்சிகள் இருந்தாலும் திருமாவளவனின் செல்வாக்கு மற்ற கட்சித் தலைவர்களை காட்டிலும் அதிளவே உள்ளது. மேலும், கூட்டணிக்குள் பாமக வந்தால் வெளியேறிவிடும் என்றும் திருமாவளவன் உறுதியாக உள்ளார்.
பாமக தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி என்று பிளவுபட்டுள்ள நிலையில், அவர்கள் இதே நிலையில் தேர்தலைச் சந்தித்தால் அவர்கள் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு மிகப்பெரிய பலவீனம் ஆகும். தன்னுடைய முக்கியத்துவம் அதிகரித்துள்ள வரும் சட்டமன்ற தேர்தலில், கூட்டணியில் அதிக தொகுதிகளை ஒதுக்க திமுக-வை வலியுறுத்த திருமாவளவன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இரட்டை இலக்கம்:
குறிப்பாக, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-விடம் இரட்டை இலக்கத்தில் சீட்டுகள் ஒதுக்க வலியுறுத்த அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனின் கோரிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாரா? அல்லது கடந்த தேர்தலைப் போல ஒற்றை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்குவாரா? அல்லது அரசியல் சதுரங்கத்தில் திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேறுவாரா? என்பது அடுத்தடுத்த மாதங்களில் தெரிய வரும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்த விசிக-விற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 4 இடங்களில் விசிக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் திமுக கூட்டணிக்கு விழும் 4 வாக்குகளில் ஒரு வாக்கு விசிக-வின் வாக்கு என்றும், திராவிட மாடல் அரசு அமைய உறுதுணையாக இருப்போம் என்றும் பேசியுள்ளார். இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக-விற்கு வாக்கு வங்கி அதிகளவில் உள்ள வட தமிழகத்தில் அவர் அதிக தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுப்பார் என்று கருதப்படுகிறது.





















