Unreserved Ticket Restriction: ரயில்ல முன்பதிவில்லாத பெட்டில பயணம் பண்றீங்களா.? அப்போ இந்த புதிய கட்டுப்பாடு பத்தி தெரிஞ்சுக்கோங்க
ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர ரயில்வே முடிவு செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

நாடு முழுவதும், பொதுமக்களின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக ரயில்கள் உள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு லட்சக்கணக்கானோர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய திட்டத்தை கொண்டுவர இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
முன்பதிவில்லாத பெட்டிகளில் முண்டியடிக்கும் கூட்டம்
மக்களின் மிக முக்கிய போக்குவரத்தாக உள்ள ரயில்களில், கூட்டத்திற்கு பஞ்சமே கிடையாது. அதிலும், முன்பதிவில்லாத பெட்டிகளில் ஏறும் கூட்டத்தை பார்த்தாலே மூச்சுத் திணறல் வந்துவிடும். அப்படியானால், அதில் பயணம் செய்பவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
தற்போது ரயில்களில் பயணம் செய்ய, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உள்ளன. அதேபோல், குறைந்த கட்டணத்துடன் எளியவர்கள் பயன்பெறும் வகையிலும், கடைசி நேரத்தில் திட்டமிடுபவர்கள் வசதிக்காகவும், முன்பதிவில்லாத பெட்டிகளும் ரயில்களில் உண்டு.
அந்த முன்பதிவில்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் வழங்குவதற்கு இதுவரை கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அதனால், ஏராளமானோர் அந்த டிக்கெட்டை பெற்று பயணிக்கின்றனர். இதில் பிரச்னை என்னவென்றால், முன்பதிவில்லாத பெட்டிகளில் 90 முதல் 100 பேருக்கே இருக்கை வசதி உள்ள நிலையில், வழங்கப்படும் டிக்கெட்டுக்கோ கட்டுப்பாடே கிடையாது.
இதனால், அந்த பெட்டிகளில் ஏறும் கூட்டத்திற்கும் அளவே கிடையாது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டே, ரயில்வே தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு இனி 150 டிக்கெட்டுகள் மட்டுமே விநியோகம்
முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு புதிய திட்டத்தை கொண்டுவருகிறது ரயில்வே. அதன்படி, நீண்ட தூர ரயில்களில் இணைக்கப்பட்டுள்ள முன்பதிவில்லாத பெட்டிகளில், ஒரு பெட்டிக்கு தலா 150 டிக்கெட்டுகளை மட்டுமே வழங்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் புதுடெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள சாதக, பாதகங்களை தெரிந்துகொண்ட பின்னர், இத்திட்டத்திற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது.
உதாரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்களில் தலா 4 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி ஒரு பெட்டிக்கு 150 டிக்கெட்டுகள் என, ஒரு ரயிலுக்கு முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் மொத்தம் 600 மட்டுமே விநியோகிக்கப்படும்.
தற்போது, 100 இருக்கைகள் கொண்ட ஒரு முன்பதிவில்லாத பெட்டியில், மும்மடங்காக, அதாவது 300-க்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இதனால் பெரும் இட நெருக்கடி ஏற்படுவதோடு, மூச்சுத் திணறல் ஏற்படும் அளவிற்கு பயணிகளுக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனை கருத்தில் கொண்டே, பயணிகள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், இந்த புதிய திட்டத்தை ரயில்வே செயல்படுத்த உள்ளது.
இது மட்டுமல்லாமல், ரயில் பெட்டிகள், எஞ்சின்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





















