Kalki 2898 AD: பிரபாஸின் கல்கி படக் காட்சிகள் திருடப்பட்டவை.. தென் கொரிய ஓவியக் கலைஞர் குற்றச்சாட்டு!
பிரபாஸ் நடித்து உருவாகியுள்ள கல்கி படத்தின் காட்சிகள் தனது ஓவியங்களில் இருந்து திருடப்பட்டதாக தென் கொரியாவைச் சேர்ந்த சுங்க் சோய் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்கி 2898
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சுமார் 600 கோடி செலவில் வைஜயந்தி மூவிஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அமிதாப் பச்சன், தீபிகா படூகோன், கமல்ஹாசன் போன்ற பெரும் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். புராணக் கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷனாக உருவாகியுள்ள படம் கல்கி.
இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில நாட்கள் முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தத்ரூபமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், பிரமாண்டமான செட் என ஒரு கற்பனை உலகத்தை இப்படத்தில் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் கவனம் ஈர்த்துள்ள நிலையில், இப்படத்தின் காட்சியமைப்புகள் தன்னுடைய ஓவியங்களில் இருந்து திருடப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த சுங் சோய் என்கிற டிஜிட்டல் ஓவியர்.
கல்கி படக்குழு மீது குற்றச்சாட்டு
#Prabhas’#Kalki2898AD trailer’s intro was copied from a 10-year-old design video by Illustrator Artist #SungChoi. He shared this shot on his Instagram handle 🫢🫢🫢 pic.twitter.com/rOM3B8lCwJ
— VCD (@VCDtweets) June 13, 2024
தென் கொரியாவைச் சேர்ந்த சுங் சொய் பல்வேறு விதமான கற்பனைச் சித்திரங்களை வரைந்து பிரபலமானவர். ஹாலிவுட்டின் அனிமேஷன் ஜாம்பவான்களான வால்ட் டிஸ்னி, வார்னர் ப்ரோஸ், மார்வல் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றி இருக்கிறார். கல்கி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வரைந்த ஓவியங்களைப் பகிர்ந்து அதில் இருந்து கல்கி படத்தின் காட்சிகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஓவியத்தை தான் பத்து ஆண்டுகள் முன்பாக வரைந்ததாகவும், தன்னிடம் அனுமதியே பெறாமல் அதை கல்கி படத்தில் வைத்ததற்காக அவர் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மேல் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவுகள் பெருகத் தொடங்கியுள்ளன. தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்ஸ் அவருக்கு ஆலோசனைகளை முன்னதாக வழங்கினர். இந்த விவகாரம் பெரியளவில் வெடிக்க இருந்த நிலையில், தற்போது சுங் சோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இந்தப் பதிவை நீக்கியுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக படக்குழு அவரை அணுகி மன்னிப்பு கேட்டிருக்கலாம் அல்லது அவரது ஓவியத்தை பயன்படுத்தியதற்கான சன்மானத்தை வழங்கியிருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.