கும்பகோணம் குற்றவாளி கொலை சம்பவம்... தற்காத்துக் கொள்ள தாக்கிய அண்ணன் கைது
காளிதாஸ் எப்போதும் குடிபோதையிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் காளிதாஸ் தனது வீட்டு வாசலில் தலையில் லேசான காயத்துடன் இறந்து கிடந்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கீழமேடு கிராமத்தை சேர்ந்தவர் காளி என்கிற காளிதாஸ் (36). கூலித் தொழிலாளி. சுவாமிமலை போலீசில் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரது மனைவி அம்பிகா (33). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். காளிதாசுடன் மகனும், அம்பிகாவுடன் மகளும் உள்ளனர்.
காளிதாஸ் எப்போதும் குடிபோதையிலேயே இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் காளிதாஸ் தனது வீட்டு வாசலில் தலையில் லேசான காயத்துடன் இறந்து கிடந்தார். தகவறிந்த சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிதாஸ் உடலை கைப்பற்றி கும்பகோணம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாஸ் குடிபோதையில் கீழே விழுந்து இறந்து விட்டாரா அல்லது வேறு யாரும் தாக்கி இருக்க கூடுமா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காளிதாஸின் அண்ணன் பாண்டியன் (45). இவர் கும்பகோணம் அருகே தேனாம்படுகை நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு தனது தம்பி காளிதாஸ் எப்போதும் குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருப்பதை கண்டிப்பதற்க ஊரில் இருந்து வந்துள்ளார். அப்போதும் காளிதாஸ் குடிபோதையில் இருந்துள்ளதை கண்டு அண்ணன் பாண்டியன் சத்தம் போட்டுள்ளார். அப்போது அண்ணன் பாண்டியனை தகாத வார்த்தைகள் கூறி திட்டிய காளிதாஸ் அவரை அடிப்பதற்காகவும் முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த பாண்டியன் தன்னை தற்காத்துக் கொள்ள அருகில் கிடந்த மர ரீப்பரால் காளிதாஸ் தலையில் ஒரு அடி அடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளார். பின்னர் அந்த இடத்தை விட்டு அச்சத்துடன் சென்று விட்டார்.
கீழே விழுந்ததில் காயமடைந்த காளிதாஸ் மர ரிப்பரால் தாக்கப்பட்டதாலும் அதிக அளவில் ரத்தம் வெளியேறி மரணம் அடைந்துள்ளார் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

