முஸ்லீம் ஊழியர்கள் குஷி! ஒரு மணிநேரத்திற்கு முன்பே கிளம்பலாம்! - தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திர அரசும் அதிரடி!
தெலுங்கானா அரசாங்கத்தைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் செவ்வாய்க்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்தது

இஸ்லாமிய மதத்தை கடைபிடிக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ரம்ஜான் மாதத்தின் மார்ச் 2 முதல் 30 வரை அனைத்து வேலை நாட்களிலும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அலுவலகங்கள் / பள்ளிகளை விட்டு செல்லலாம் என்று ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா அரசாங்கத்தைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் செவ்வாய்க்கிழமை ஒரு உத்தரவை பிறப்பித்தது. அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்களும் ரம்ஜான் மாதத்தில் தொழுகை நடத்துவதற்காக தங்கள் அலுவலகங்களை விட்டுச் சீக்கிரமாக செல்ல அனுமதி அளித்துள்ளது.
இதில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட நபர்கள் மற்றும் கிராம/வார்டு செயலகங்களும் அடங்கும்.
புனித ரம்ஜான் மாதத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரை அனைத்து வேலை நாட்களிலும், தேவையான சடங்குகளைச் செய்வதற்காக, தங்கள் அலுவலகங்கள் அல்லது பள்ளிகளை மூடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியேறலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், ரமலான் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிப்ரவரி 28 அன்று சந்திரன் காணப்பட்டால் முதல் நோன்பு சனிக்கிழமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்களும் மாலை 4 மணிக்கு அலுவலகங்களை விட்டு வெளியேற தெலுங்கானா அரசு திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
இந்த உத்தரவு இந்த ஆண்டு மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை முஸ்லிம் சமூகத்தால் அனுசரிக்கப்படும் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அரசாங்கம் இதன்மூலம் மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள்/, ஒப்பந்த / அவுட்சோர்சிங் / வாரியங்கள்/ நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் ரம்ஜான் புனித மாதத்தில், அதாவது 02.03.2025 முதல் 31.03.2025 வரை (இரண்டு நாட்களும் உட்பட) மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள்/பள்ளிகளை விட்டு வெளியேற அனுமதிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த மற்றும் அவுட்சோர்ஸ் ஊழியர்கள், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் அமலில் இருக்கும்.

