KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
IPL 2025 KKR vs RCB Head To Head: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

IPL 2025 KKR vs RCB Head To Head: கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2025:
டி20 கிரிக்கெட்டின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின், நடப்பாண்டு எடிஷன் இன்று தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். நாடு முழுவதும் உள்ள சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட 13 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. பரபரப்பிற்கு பஞ்சமின்றி, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஐபிஎல் போட்டிகளின் மீது, எப்போதும் போன்று இந்த முறையும் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. அதன்படி, நாளை நடைபெறும் முதல்போட்டியே பட்டாசாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா Vs பெங்களூரு:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. கடந்த முறை ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் பட்டம் வென்ற கொல்கத்தா அணி இந்த முறை ரகானே தலைமையில் களமிறங்குகிறது. அதேநேரம், கடந்த முறை டூப்ளெசிஸ் தலைமையில் களமிறங்கிய பெங்களூரு அணி, இந்த முறை ரஜத் படிதார் எனும் இளம் கேப்டனின் கீழ் களமிறங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் கண்டுகளிக்கலாம்.
கோலி Vs வருண்:
வழக்கம்போல் பெங்களூரு அணி இந்த முறையும் வலுவான பேட்டிங் லைன் - அப்பை கொண்டுள்ளது. அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் கோலியை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது. பிலிப் சால்ட், ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டோன் மற்றும் டிம் டேவிட் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு முந்தைய சீசன்களை காட்டிலும் வலுவான பவுலிங் யூனிட்டையும் பெற்றுள்ளனர். மறுமுனையில் கொல்கத்தா அணி மீண்டும் சரியான கலவையிலான பிளேயிங் லெவனை கட்டமைக்க தேவையான வீரர்களை கொண்டுள்ளது. அதன்படி பேட்டிங்கில் டிகாக், ரகானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி ரிங்கு சிங், ரசல் என பேட்டிங் நீள்கிறது. அதற்கு ஈடாக பந்துவீச்சில் நரைன், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா போன்ற தரமான வீரர்கள் உள்ளனர். பெங்களூரு அணியை காட்டிலும், கூடுதல் ஆல்-ரவுண்டர்களை பெற்று இருப்பது கொல்கத்தா அணியை வலுவானதாக மாற்றியுள்ளது. குறிப்பாக இந்த போட்டியில் கோலி, தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தியை எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈடன் கார்டன் மைதானம் எப்படி?
இந்தியாவில் உள்ள மைதானங்களில் பேட்ஸ்மேன்களால் மிகவும் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்று ஈடன் கார்டன். களத்தில் பெரிய தாக்கம் எதுவும் இருக்காது என்பதால், பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் நொறுக்கக் கூடும். நேரம் செல்ல செல்ல பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுவரை இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள 93 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 38 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 55 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடைசி 5 ஆண்டுகளில் விளையாடிய 10 போட்டிகளில் கூட, கொல்கத்தாவே 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையை புதிய கேப்டன்பட்டிதார் மாற்றுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
உத்தேச பிளேயிங் லெவன்:
கொல்கத்தா: குயின்டன் டி காக், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரகானே (கேப்டன்), மனீஷ் பாண்டே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், அன்ரிச் நோர்ட்ஜே, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோரா
இம்பேக்ட் பிளேயர்: மயங்க் மார்கண்டே
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
இம்பேக்ட் பிளேயர்: தேவ்தத் படிக்கல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

