Cinema Headlines: இந்தியன் 2 கதறல்ஸ் பாடல் வீடியோ.. ஹரா, வெப்பன் படங்களின் விமர்சனம்.. இன்றைய சினிமா செய்திகள்!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ!
சர்ப்ரைஸாக ஓடிடியில் வெளியான கவினின் “ஸ்டார்” படம்.. எந்த ஓடிடி தளம் தெரியுமா?
கவின் நடித்து இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் இன்று ஓடிடியில் சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது. நடிகைகள் அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், காதல் சுகுமாறன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்த நிலையில் யுவன் ஷங்கர் இசை ரசிகர்களை ஈர்த்தது. தொடர்ந்து படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 20 கோடிகள் வசூலித்தது. படம் வெளியாகி தற்போது 27 நாள்களைக் கடந்துள்ள நிலையில், இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
14 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளி விழா நாயகன் மோகன்.. கம்பேக் தந்தாரா? ஹரா படத்தின் விமர்சனம்
80களின் தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகனாகக் கொண்டாடப்பட்ட மோகன், நாடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஹரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தன் மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிந்து அதன் பின் உள்ள அரசியல் வரை அறிந்து மோகன் பழிதீர்ப்பதே ஹரா படத்தின் கதை. தமிழ் சினிமாவின் காதன் நாயகனாக கலக்கிய மோகன் ஒரு தந்தையாக, ஒரு ஆக்ஷன் ஹிரோவாக தன்னை படம் முழுவதும் உயிர்ப்பாக வைத்திருக்க முயற்சிப்பது பாராட்டிற்குரியது. ஆனால், திரைக்கதையும் வசனங்களும் மோகனைத் தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களின் படுசுமாரான நடிப்பும் படத்துக்கு மிகப்பெரிய மைனஸ். மொத்தத்தில் விஜய்யுடன் மோகன் இணைந்துள்ள தி கோட் படம் தான் அவருக்கு சரியான கம்பேக் படமாக அமையும்.
சூப்பர் ஹியூமனாக கலக்கினாரா சத்யராஜ்?.. வசந்த் ரவியின் வெப்பன் திரைப்பட விமர்சனம்..!
நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி லீட் ரோலில் நடிக்க, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் வெப்பன். ஜிப்ரான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். சூப்பர் ஹியூமன்கள் உள்ளனர் என நம்பி சத்யராஜைத் தேடும் யூடியூபர் வசந்த் ரவி, தங்கள் குழுவுக்கு ஆபத்தாக இருக்கும் சூப்பர் ஹியூமனைத் தேடி அலையும் ப்ளாக் சொசைட்டி எனும் ரகசியக்குழு இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக் கொள்ள அதன் தொடர்ச்சியாக நடப்பதே கதை. சூப்பர் ஹியூமனாக சத்யராஜ் மாஸ் செய்திருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்ததை விட காட்சிகள் குறைவு. கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் வசந்த் ரவி கச்சிதமாகப் பொருந்திப்போனாலும், மிகை நடிப்பை ஆங்காங்கே வெளிப்படுத்தி இருக்கிறார். சத்யராஜை காண்பிக்காமல் வசனங்களாலே முதல் பாதியைக் கடத்தி இறுதியாகக் காண்பிப்பது, மார்வெல் கதைகளை நினைவூட்டும் காட்சியமைப்பு ஆகியவை மைனஸ். ஆனால் இரண்டாம் பாதிக்கு லீட் கொடுத்து சரியான மீட்டரில் ஆவலூட்டி முடித்திருக்கிறார்கள்.
தாத்தா வராரு கதறவிடப் போறாரு.. வெளியானது இந்தியன் 2 “கதறல்ஸ்” பாடல் லிரிக்கல் வீடியோ!
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் கதறல்ஸ் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், மொத்தம் ஆறு பாடல்களைக் கொண்ட இந்தியன் 2 பட ஆல்பம் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியானது. அனிருத்தின் இசை இப்படத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இந்தியன் 2 பாடல்கள் வைப் செய்வதற்கு ஏற்ற வகையில் இன்றைய இளைஞர்களைக் கவர்ந்து வருகின்றன.