TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2 Exam: தேர்வர்கள் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

குரூப் 2 முதன்மைத் தேர்வு நாளை (பிப்.22) மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள நிலையில், முக்கிய விதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
534 குரூப் 2 பணி இடங்கள், 2006 குரூப் 2ஏ பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை நடைபெற உள்ளது. இரண்டாம் தாளுக்கு, பொது அறிவு (டிகிரி தரத்தில்) பாடம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. 7967 தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
இந்த நிலையில் தேர்வர்களுக்கு பல்வேறு விதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்வுக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும். அதிகபட்சமாய் 9 மணி வரை வரலாம். அதற்குப் பிறகு தேர்வர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு சரியாக 9.30 மணிக்குத் தொடங்கும்.
தேர்வர்கள் தேர்வு தொடங்க திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முப்பது நிமிடத்திற்கு முன்பாகவே தேர்வு அறைக்குள் அமர்ந்து விட வேண்டும்.
தேர்வறையின் இருக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண், பெயர், புகைப்படம், ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே, தேர்வர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும்.
தேர்வர்கள் சக தேர்வர்களிடம் இருந்து எந்தப்பொருளையும் வாங்கத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு குறிப்பாக அனுமதிக்கப்பட்ட பேனா மற்றும் பொருள்களைத் தாங்களே கொண்டு வந்து உபயோகிக்க வேண்டும்.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல், எக்காரணத்தைக் கொண்டும் அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்ள தேர்வர் அனுமதிக்கப்பட மாட்டார்.
தேர்வர்கள் தேர்வாணைய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் தேர்வு மையத்திற்கு வரவேண்டும். தவறும்பட்சத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை / கடவுச்சீட்டு / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு எண் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒளிநகலை தேர்வு மையத்திற்கு கொண்டு வரவேண்டும்.
தேர்வர்கள் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் அறைக் கண்காணிப்பாளர் / தலைமை கண்காணிப்பாளர் / ஆய்வு அலுவலர்கள் / அதிகாரம் அளிக்கப்பட்ட நபர்கள் எவரும் அனுமதிச்சீட்டினை ஆய்வுக்காக கேட்கும்பொழுது அவர்களிடம் காண்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் தங்களது அனுமதிச்சீட்டில் அறைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தை கட்டாயம் பெறவேண்டும்.
தேர்வர்களுக்கான அறிவுரைகள் - விடைப்புத்தகம் செல்லாதாக்கப்படுதல்
- whitener, sketch pens, வண்ண பென்சில்கள், வண்ண மைப்பேனா, crayons போன்றவற்றை உபயோகப்படுத்துதல்.
- வினாத்தொகுப்பு / விடைப்புத்தகத்தில் குறிப்பாக அறிவுறுத்தப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் மதக்குறியீட்டினை எழுதுதல்,
- தேர்வரின் பெயரை எழுதுதல்,
- கையொப்பம், தொலைபேசி எண், அலைபேசி எண், வேறு ஏதேனும் பெயர்களை எழுதுதல், சுருக்கொப்பம் மற்றும் முகவரி எழுதுதல்.
- தேர்வர் தன்னுடைய தேர்ச்சி தொடர்பாக விடைப் புத்தகத்தில் மதிப்பீட்டாளரின் பரிவைத் தூண்டும் வகையில் எழுதுதல்.
- விடைப்புத்தகத்தில் உரிய இடங்களில் தேர்வர் கையொப்பமிடாமல் இருத்தல் ஆகியவற்றை செய்யக் கூடாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

