IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
India vs Pakistan: விராட் கோலியின் அபார சதத்தின் உதவியுடன் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று நடந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ரிஸ்வான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
242 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, ஆட்டத்தைத் தொடங்கிய பாபர் அசாம் பவுண்டரிகளாக விளாசிய பாபர் அசாம் 23 ரன்னில் ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக் 10 ரன்னில் அவுட்டாக ரிஸ்வானின் 46 ரன்கள், செளத் ஷகிலின் 62 ரன்கள் எடுக்க, கடைசியில் குஷ்தில்ஷா 38 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் அணி 242 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.
அதிரடியாக தொடங்கிய ரோகித்:
இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய ரோகித் சர்மா ரோகித் சர்மா 15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20 ரன்கள் எடுக்க சுப்மன்கில் விராட் கோலி நிதானமாக ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாகவும், அடித்தும் ஆடினர். பந்துகளை பவுண்டரிக்கு விளாசிய இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்திய சுப்மன்கில் இந்த போட்டியிலும் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 46 ரன்களில் அவுட்டானார். சுழற்பந்துவீச்சாளர் அர்பர் அகமத் பந்தில் போல்டானார்.
கோலி - ஸ்ரேயாஸ் பார்ட்னர்ஷிப்:
அடுத்து விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த விராட் கோலி எந்தவித பதட்டமுமின்றி ரன்களை ஓடியும், ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அடித்து ரன்கள் சேர்த்து அரைசதம் அடித்தார்.
அவருக்கு மறுமுனையில் நல்ல ஒத்துழைப்பு தந்த ஸ்ரேயாஸ ஐயரும் அரைசதம் விளாசினார். 100 ரன்களில் சேர்ந்த இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய இந்த பார்ட்னர்ஷிப்பை குஷ்தில் ஷா பிரித்தார். அணியின் ஸ்கோர் 214 ரன்கள் எடுத்த நிலையில் 56 ரன்கள் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார்.
கோலி சதத்துடன் வெற்றி:
அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கி அதிரடியாக பேட்டிங்கில் பவுண்டரியுடன் தொடங்கிய ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னில் அவுட்டானார். இந்திய அணியின் வெற்றி உறுதியான நிலையில் விராட் கோலி சதம் அடிப்பாரா? மாட்டாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. அவர் சிங்கிள் ரன்களாக எடுத்தார்.
ஷாகின் அப்ரிடி பந்தில் அவர் அதிரடியாக ஆட முயற்சித்த நிலையில் சதத்தின் அருகில் நெருங்கினார். அக்ஷர் படேல் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த நிலையில் வெற்றிக்கும், கோலியின் சதத்திற்கும் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி பவுண்டரி அடித்து தன்னுடைய 51வது சதத்தை எட்டியது மட்டுமின்றி இந்தியாவும் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்காக விராட் கோலி 111 பந்தில் 7 பவுண்டரியுடன் 100 ரன்களை எட்டி ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்ஷர் படேல் 3 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வெளியேறுகிறதா பாகிஸ்தான்?
நியூசிலாந்து அணிக்கு எதிரான தாேல்வி மற்றும் இன்று கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.பெரும்பாலும் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறும் வாய்ப்பே தற்போது அதிகளவு உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். அப்படி நடந்தால் இந்தியா - நியூசிலாந்து 2 வெற்றிகளுடன் முன்னேறும். பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

