அடுத்தடுத்து முகூர்த்தம்! பேருந்து, ரயில்களில் கூட்டம்! காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை ஜோர்
தை மாத முகூர்த்தம் நாளை முதல் அடுத்த 4 நாட்களுக்குள் 3 முகூர்த்தம் வருவதால் தமிழ்நாடு முழுவதும் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தை மாதம் என்றாலே பொங்கல் மட்டுமின்றி அந்த மாதத்தில் வரும் முகூர்த்த நாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஏனென்றால், மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் உள்ளிட்ட எந்த காரியங்களும் நடத்தப்படுவது இல்லை. இதனால், அடுத்து வரும் தை மாதத்தில் வரும் முகூர்த்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
அடுத்தடுத்து முகூர்த்தம்:
ஏனென்றால் மார்கழி மாதத்தில் சுபகாரியங்கள் நடத்தாத பலரும் தை மாதத்தில் வரும் முகூர்த்த நாளிலே சுபகாரியங்களை நடத்துவார்கள். மேலும், தமிழ் மாதத்தின் முதல் மாதமான தையில் சுபகாரியங்களை செய்வதையும் சிறப்பு வாய்ந்ததாக கருதுவார்கள்.
இந்த தை மாதத்தின் வளர்பிறை முகூர்த்தமாக ஜனவரி 31, பிப்ரவரி 2 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகள் வருகிறது. அதாவது, நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் திங்கள்கிழமை முக்கிய முகூர்த்த நாள் ஆகும். மார்கழி முடிந்து வரும் முகூர்த்த நாள் என்பதாலும், நான்கே நாட்களுக்குள் 3 முகூர்த்த நாட்களாக வருவதாலும் இந்த தினங்களில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான திருமணங்களும், புதுமனை புகுவிழா, காது குத்து விழா, வீடு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
களைகட்டும் கல்யாண ஏற்பாடுகள்:
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன், பெருமாள், முருகன், விநாயகர், அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற உள்ளது. அரசு நிர்வகிக்கும் சமுதாய கூடங்கள், தனியார் திருமண மண்டபங்களும் ஏற்கனவே இந்த முகூர்த்த நாளில் முன்பதிவாகிவிட்டது.
முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னை உள்பட பெரு நகரங்களில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வருகிறது. பேருந்துகளிலும், ரயில்களிலும் பயணிகள் ஏற்கனவே ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்துள்ளனர்.
காய்கறிகள், பூக்கள், பழங்கள் வரத்து உயர்வு:
அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் பெருநகரங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய காய்கனி சந்தைகளில் காய்கறிகள் வரத்து வழக்கத்தை விட அதிகளவு உள்ளது. ஆப்பிள், ஆரஞ்ச் உள்ளிட்ட பழங்களின் வரத்தும் சந்தைகளில் அதிகளவு உள்ளது.
மேலும் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. மல்லி, கதம்பம், ரோஜா உள்ளிட்ட பூக்களின் வரத்து வழக்கத்தை விட அதிகளவு பூக்கள் சந்தையில் காணப்படுகிறது. மேலும்,. மாலைகள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருகிறது.
பத்திரப்பதிவு அலுவலகங்கள்:
அடுத்த 4 நாட்கள் தொடர் முகூர்த்தம் என்பதால் அடுத்த நான்கு நாட்கள் மக்கள் பரபரப்பாகவே காணப்படுவார்கள். மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும், முகூர்த்த நாட்கள் என்பதால் பத்திரப்பதிவு அலுவகங்களில் பத்திரங்கள் பதியவும் மக்கள் வழக்கத்தை விட அதிகளவு காணப்படுவார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

