US Plane Crash: ஒரு உயிர் கூட பிழைக்கல.. 67 பேரும் பலி? கதறும் குடும்பத்தினர்.. அமெரிக்க விமான விபத்து நடந்தது என்ன?
US Plane Crash: அமெரிக்காவில் விமானம் மற்றும் ரணூவ ஹெலிகாப்டர் மோதியதால் ஏற்பட்ட விபத்தில், அவற்றில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

US Plane Crash: அமெரிக்காவில் விமானம் மற்றும் ரணூவ ஹெலிகாப்டர் மோதியதால் ஏற்பட்ட விபத்து, கடந்த 24 ஆண்டுகளில் அமெரிக்காவில் பதிவான மோசமான விபத்து என கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் - விமானம் மோதி விபத்து:
அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது, ராணுவ ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளனது. இதனால், நடுவானிலேயே இரண்டு வாகனங்களும் பற்றி எரிய தொடங்கின. தொடர்ந்து, விமானமானது வாஷிங்டன் டிசியின் போடோமேக் ஆற்றில் விழுந்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து இதுவரை 27 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆற்றின் உள்ளே தலைகீழாக கவிழ்ந்த விமானத்தை மூன்று பாகங்களாக தேடுதல் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
67 பேரும் பலி?
விமானத்தில் இருந்த 60 பயணிகள் உட்பட 64 பேர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை ஒருவரை கூட உயிருடன் மீட்கவில்லை எனவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வாஷிங்டன் டிசி விமான விபத்தானது, கடந்த 24 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக கூறப்படுகிறது. விபத்தில் பலியானவர்களில் இரண்டு பேர் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
போதிய ஊழியர்கள் இல்லையா?
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து பொதுவாக கருப்பு பெட்டிகள் என அழைக்கப்படும் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த ரெக்கார்டர்கள் விமானத்தின் போது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கும். அதோடு, ”விமான விபத்து நடந்தபோது கட்டுப்பாட்டு அறையில் அந்த நேரம் மற்றும் போக்குவரத்தின் அளவு ஆகியவற்றை சமாளிப்பதற்கு இணையான பணியாளர்கள் அங்கு இல்லை” என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிபர் ட்ரம்ப் எழுப்பிய கேள்வியும் போதிய பணியாளர்கள் அங்கு இல்லையா என்ற கேள்வியையே ஏற்படுத்தியுள்ளது. அதில், “ வழக்கமான பாதையில் வந்துகொண்டிருந்த விமானத்தின் மிது ஒளிவிளக்குகள் பளீச் என எரிகின்றன. அப்படி இருக்கையில் ஹெலிகாப்டர் ஏன் மேலே செல்லவில்லை அல்லது கீழே செல்லவில்லை, அல்லது திரும்பவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்பதற்கு பதிலாக ஹெலிகாப்டருக்கு என்ன செய்ய வேண்டும் என்று கட்டுப்பாட்டு மையம் ஏன் சொல்லவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு சொல்வது என்ன?
அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விபத்து பற்றி பேசுகையில், கன்சாஸின் விசிட்டாவிலிருந்து புறப்பட்ட பிராந்திய ஜெட் விமானம் விமான நிலைய ஓடுபாதையை நெருங்கும் போது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது” என தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி கூறுகையில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான விமான நிலையங்களை அமெரிக்கா கொண்டுள்ளது. "இங்கே என்ன நடந்தது என்பதற்கான ஆரம்பகட தகவல்கள் எங்களிடம் உள்ளன, மேலும் உலகில் பாதுகாப்பான வான்வெளி எங்களிடம் உள்ளது என்பதை நான் உங்களுக்கு முழு நம்பிக்கையுடன் கூறுவேன்" என்று டஃபி கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

