IND Vs PAK: உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..! லிஸ்டில் கோலி, ரோகித் - இந்தியா, பாகிஸ்தானின் அடுத்த நிலை என்ன?
IND Vs PAK: சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

IND Vs PAK: சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானை பந்தாடிய பாகிஸ்தான்:
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் , நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த எதிரணி 241 ரன்களை சேர்ப்பதற்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதன்படி, 42.3 ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல், 100 ரன்களை விளாசினார். ஸ்ரேயாஸ் 56 ரன்களை சேர்த்தார். இந்நிலையில், இந்த போட்டியில் படைக்கப்பட்ட பல்வேறு சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உடைத்தெறியப்பட்ட சாதனைகள்..!
ஒருநாள் போட்டிகளில் வேகமாக 14,000 ரன்கள்: விராட் கோலி ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் (ODIs) 14,000 ரன்களை எட்டிய வேகமான வீரர் ஆனார். இந்த மைல்கல்லை வெறும் 298 போட்டிகளில் எட்டினார். சச்சின் டெண்டுல்கரை விட 63 இன்னிங்ஸ்களுக்கு முன்பாக இந்த சாதனையை படைத்துள்ளார்.
ஒரு இந்திய ஃபீல்டரின் அதிக கேட்சுகள்: ஒருநாள் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த இந்திய பீல்டர் என்ற புதிய சாதனையையும் கோலி படைத்தார், மொத்தம் 158 கேட்சுகளைப் பிடித்து, முகமது அசாருதீனின் 156 கேட்சுகள் சாதனையை முறியடித்தார்.
51வது ஒருநாள் சதம்: கோலியின் ஆட்டமிழக்காத சதம் (111 பந்துகளில் 100 ரன்கள்) ஒருநாள் போட்டிகளில் அவரது 51வது சதத்தைக் குறித்தது. கிரிக்கெட் வரலாற்றில் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை வலுப்படுத்தியது.
முதல் வீரர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பை மற்றும் ஆசியக்கோப்பை போட்டிகளில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்
ரோகித் சர்மா அசத்தல்: ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக வேகமாக 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சச்சினின் (197 இன்னிங்ஸ்) சாதனையை ரோகித் சர்மா (181 இன்னிங்ஸ்) முறியடித்தார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக வெற்றிகள்: நேற்றைய வெற்றியின் மூலம் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணியின் மொத்த வெற்றி 20 ஆக உயர்ந்துள்ளது. வேறு எந்த அணியும் இத்தனை வெற்றிகளை பதிவு செய்ததில்லை.
ஹாட்ரிக் வெற்றி: துபாய் மைதானத்தில் எதிர்கொண்ட மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த மைதானத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியே கண்டதில்லை (ஒருநாள் போட்டிகளில்) என்ற சாதனை பயணமும் தொடர்கிறது.
அடுத்து என்ன?
அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சாம்பியன்ஸ் ட்ராபி அரையிறுதிக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியை நியூசிலாந்து வீழ்த்திவிட்டால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்
பாகிஸ்தான் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெறும் நம்பிக்கையைப் பெற, மீதமுள்ள போட்டிகளில் அவர்கள் வெற்றி பெற்றாக வேண்டும். அதேநேரம், வங்கதேசம் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தானால் போட்டியில் தொடர முடியும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

