காலை உணவு திட்டம்: தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தம் ரத்து – மேயர் ப்ரியா அதிரடி
கடந்த 2023ஆம் ஆண்டே காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது.

காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் மட்டும் 356 பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு சமைப்பதற்கான திட்டத்தினை அரசு தனியாரிடம் கொடுக்கலாம் என முயற்சி செய்தது. இதற்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக சாடின. மேலும் கண்டனங்களையும் தெரிவித்து வந்தன.
கடந்த 2023ஆம் ஆண்டே காலை உணவுத் திட்டத்துக்காக உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு கொடுக்க வேண்டும் என அரசு முடிவு செய்தது. இதற்காக தீர்மானமும் கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அத்தகைய முயற்சி கைவிடப்படுவதாக அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் அரசு அந்த முடிவை எடுத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என மேயர் ப்ரியா கூறியிருந்தார். முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகராட்சியே இந்த திட்டத்தை செயல்படுத்தும் எனவும் ப்ரியா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக கடந்த 15.9.2022 அன்று 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 1.14 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். இந்தத் திட்டத்துக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 25.8.2023 ல் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 30,992 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமில்லாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்தநாள் அன்று முதலமைச்சர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள்

