Chhota Bheem Movie: குழந்தைகளை கோடை விடுமுறையில் சரியாகக் குறிவைத்த “சோட்டா பீம்” படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Chhota Bheem: அனிமேஷன் தொடராக குழந்தைகளைக் கவர்ந்த சோட்டா பீம் தற்போது லைவ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது
சோட்டா பீம்
ஒவ்வொரு தலைமுறை குழந்தைகளையும் வெவ்வேறு கார்டூன் நிகழ்ச்சிகள் கவர்ந்திருக்கின்றன. 90களில் பிறந்தவர்களுக்கு கார்டூன் நெட்வர்க், போகோ, ஜெட்டெக்ஸ், சுட்டி டிவி போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல்வேறு அனிமேஷன் தொடர்கள் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக இருந்து வருகின்றன. கார்டூன்களை பொறுத்தவரை அவை பெரும்பாலும் பிற நாடுகளில் அல்லது கற்பனையான ஒரு நிலத்தில் நடக்கும் கதைகளே. அந்த வகையில் இந்தியத் தயாரிப்பில் உருவாகி இந்திய நிலத்தில் கற்பனையாக உருவான அனிமேஷன் தொடர் சோட்டா பீம் (Chhota Bheem).
டோலக்பூர் என்கிற கற்பனையான ஊரில் பீம் மற்றும் அவனது நண்பர்களான சுட்கி, ஜக்கு, ராஜூ, டோலு போலு, காளியா, இளவரசி இந்துமதி போன்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவானது இந்தத் தொடர். மாபெரும் பலசாலியான பீம் பலவிதமான வில்லன்களிடம் இருந்து டோலக்பூரை காப்பாற்றும் சாகசங்களை குழந்தைகள் வாய் பிளந்து பார்த்தனர். லட்டு சாப்பிட்டால் பீம் போல் சக்தி வரும் என்பதால் லட்டு குழந்தைகளின் பிடித்தமான இனிப்பாக மாறியது. பீம் பேக், பீம் தண்ணீர் பாட்டில், பீம் ஆடை என எல்லாமே ‘பீம்’ மயமாக மாறியது. குழந்தைகள் மத்தியில் இவ்வளவு பெரிய ஹிட் அடித்த சோட்டா பீம் புதுப்புதுக் கதைகளுடன் அடுத்தடுத்து நிறைய அனிமேஷன் படங்களாக வெளியானது. அந்த வரிசையில் தற்போது சோட்டா பீம் லைவ் ஆக்ஷன் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.
சோட்டா பீம் திரைப்படம்
#ChhotaBheemTrailer Out Now 😍💥pic.twitter.com/qYBVqH42YP
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) May 17, 2024
அனிமேஷன் படமாக வெளியான சோட்டா பீம் அண்ட் தி கர்ஸ் ஆஃப் தம்யான் (Chhota Bheem and the Curse of Damyaan) படம் தற்போது நிஜ மனிதர்கள் நடித்துள்ள லைவ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது . ராஜீவ் சிலாகா இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சோட்டா பீமாக யாக்யா பாசின் என்பவர் நடித்துள்ளார். மூத்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைவ் ஆக்ஷன் படம் என்பதால் இந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளை உருவாக்குவதற்கு மிகுந்த சிரத்தை எடுத்துள்ளது படக்குழு, அதற்கேற்ற வகையில் ட்ரெய்லரில் இருக்கும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு திருப்தியளித்துள்ளது.
மே 24ஆம் தேதி இப்படம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. தற்போது வரும் மே 31ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கோடை கால விடுமுறை நிறைவு பெற இருக்கும் தருணத்தில் இப்படம் வெளியாக இருப்பது பீம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.