Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Gautam Adani: தொழிலதிபர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி, ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.
Gautam Adani: வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, அதானி குழுமத்திற்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பங்குகளி விலையும் 14 சதவீதம் வரை உயர்ந்ததாக அமெரிக்க தரகு நிறுவனமான ஜெஃபரிஸ் தெரிவித்துள்ளது.
பட்டியலில் முதலிடம் பிடித்த கவுதம் அதானி:
கவுதம் அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததை அடுத்து, ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அடையாளத்தை மீட்டெடுத்துள்ளார். அதன்படி, 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான மதிப்புடன், அதானி குழுமத்தின் அதானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். முதல் இடத்தில் இருந்த, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி, $109 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நிகரான சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த வளர்ச்சி அதானியை உலகளவில் 11 வது பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேற்றியுள்ளது. அதே நேரத்தில் அம்பானி ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் 12 வது இடத்தைப் பிடித்தார் என்று PTI தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை கடைசி வர்த்தக அமர்வில், அதானி குழுமத்தின் அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் விலையும் 14 சதவீதம் வரை உயர்ந்தது என்று, அமெரிக்க தரகு நிறுவனமான ஜெஃபரிஸ் தெரிவித்துள்ளது.
வீழ்ச்சியும், எழுச்சியும்:
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு அதானி தனது தனிப்பட்ட சொத்தி மதிப்பில் ஏற்றம் கண்டதோடு, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அடையாளத்தை பெற்றார். இருப்பினும், ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் மோசடி, பங்குச் சூழ்ச்சிகள் மற்றும் பலவற்றின் குற்றச்சாட்டுகள் காரணமாக 2023 ஜனவரியில் அதானியின் சொத்து மதிப்பில் இருந்து 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்தது. குழுமத்தின் பங்கு விலைகளில் $150 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது மற்றும் உலகின் முதல் 20 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து அவரை வெளியேற்றியது. ஆனாலும், அதானி குழுமம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, கடனைக் குறைத்தல், வணிகத்தை ஒருங்கிணைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த 2023-24 நிதியாண்டில் மீண்டும் சாதனை படைத்தது.
அதானியின் எதிர்கால திட்டங்கள்:
அடுத்த பத்தாண்டுகளில் 90 பில்லியன் டாலர் மூலதனச் செலவுடன், விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாக அதானி குழுமம் அண்மையில் அறிவித்து இருந்தது. இந்த முன்னேற்றங்கள் அதானி குழுமத்தின் 10 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை ரூ.84,064 கோடி அதிகரித்து. மொத்த மதிப்பு ரூ.17.51 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. இந்த எழுச்சி அதானி ஆசியாவின் பணக்காரர் ஆவதற்கு உதவியது. அதானி குழுமம் இன்று நாட்டில் பல விமான நிலையங்களைச் சொந்தமாக வைத்துள்ளது. மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், மீடியா நிறுவனமான நியூ டெல்லி டெலிவிஷனோடு, பல்வேறு துறைகளில் உள்ள பல முன்னணி நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகிறது.