Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி அறிவித்துள்ளது அவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற சூழலில் தான் விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "இதுதான் எனது கடைசி டி20 உலகக் கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என விரும்பினேன். ஒரு நாள் ரன் எடுக்க முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரும். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போது என்ற தருணம் எங்களுக்கு இது. இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான்.
உலகக் கோப்பையை கைகளில் ஏந்த வேண்டும் என்று விரும்பினேன். இது ஓபன் சீக்ரெட். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கான நேரம் இது. அவர்கள் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது எங்களின் நீண்ட காத்திருப்பு. அதாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற காத்திருப்பு. ரோஹித் சர்மாவுக்கு இது 9வது டி20 உலகக் கோப்பை தொடர். எனக்கு 6வது தொடர். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் அற்புதமான நாள். நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று விராட் கோலி கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி அறிவித்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களின் இது தொடர்பாக ரோஹித் ஷர்மா பேசுகையில்,"இந்த டி20 உலகக் கோப்பை தொடர் தான் என்னுடைய இறுதிப் போட்டி. ஓய்வு பெறுவதற்கு இதை விட சிறந்த தருணம் இல்லை. நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பினோம். இதனை வார்த்தைகளால் கூறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவே நான் விரும்பியது.
இந்தியாவுக்காக கோப்பையை வென்றுவிட்டு ஓய்வை தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது வென்றுவிட்டேன். குட்பை சொல்லும் நேரம் இது. ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்" என்று ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். விராட் கோலி ஓய்வை அறிவித்த நிலையில் மற்றொரு ஜாம்பவான் வீரரான ரோஹித் ஷர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.