Annamalai Slams: இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கும்.. தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும்.. அண்ணாமலை கூறியது என்ன?
தமிழ்நாட்டில் நடந்துள்ள ஒரு ஊழல் இந்தியாவையே உலுக்கும் என்றும், தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்றும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். அது எதைப்பற்றி தெரியுமா.?

திமுக இன்று நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கண்டித்து, பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதை ஒட்டி சென்னையில் பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இது திமுக நடத்தும் நாடகம் என்று விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் நடந்துள்ள ஒரு ஊழல் இந்தியாவையே உலக்கும் என்று கூறினார். அதோடு, அதன் தாக்கம், தமிழக அரசியல் சரித்திரத்தையே மாற்றும் என்றும் கூறியுள்ளார். அது எதைப்பற்றி என்பதை தற்போது பார்க்கலாம்.
“தொகுதி மறுசீரமைப்பு குறித்த திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒரு நாடகம்“
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க, திமுக சார்பில் இன்று தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்த கூட்டம் இல்லையென்றும், நியாயமான தொகுதி சீரமைப்பை மத்திய பாஜக அரசு அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக தலைமையிலான இந்த கூட்டம் ஒரு நாடகம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு, அண்டை மாநிலங்களுடன் அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், அது குறித்து எந்த தீர்வும் காணாமல், 4 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைகளை கோட்டை விட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இப்படிப்பட்ட சூழலில், பிரச்னைக்குரிய மாநில முதல்வரான பினராயி விஜயன், துணை முதல்வரான டி.கே. சிவக்குமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் போன்றோரை அழைத்து, பிரச்னையே இல்லாத, இவர்களாகவே கற்பனையாக ஏற்படுத்திய தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றிக் கொண்டிருப்பதாக சாடினார்.
விகிதாச்சார முறைப்படியே தொகுதி மறுசீரமைப்பு நடைபெறும் என்றும், அதனால் எந்த தென் மாநிலங்களும் நாடாளுமன்ற தொகுதியை இழக்காது என்றும் அவர் கூறினார். இதனால், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கருப்புகொடி ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
“டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கும்“
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்த டாஸ்மாக் ஊழல் நிச்சயம் இந்தியாவையே உலுக்கக் கூடிய ஒரு ஊழலாக, தமிழ்நாட்டின் அரசியல் சரித்திரத்தையே மாற்றக்கூடிய ஒரு ஊழலாக இருக்கும் என்பது பாஜகவின் நம்பிக்கை என கூறினார்.
அமலாக்கத்துறையின் எஃப்ஐஆர்-கள் தங்கள் ஆட்சி காலத்தில் போடப்பட்டவை அல்ல என திமுக கூறுவதாகவும், ஆனால், நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள அஃபிடவிட்டில், 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் போடப்பட்டுள்ள பல எஃப்ஐஆர்-களை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். அதையே மறைத்து, எங்களுக்கு இதில் தொடர்பில்லை என திமுக கூறுவதாக அவர் தெரிவித்தார்.
அதோடு, மது பாட்டில்களை விற்பனை செய்யும்போது, ஒரு குவார்டர் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை அதிகமாக விற்கப்பட்டுவந்த நிலையில், இந்த பிரச்னையை பாஜக கையிலெடுத்து போராடிய பிறகுதான், எம்ஆர்பி விலைக்கு மது பாட்டில்களை விற்பனை தொடங்கியதாகவும், அதற்கு பாஜகதான் காரணம் எனவும் தெரிவித்தார்.
தற்போது நடைபெற்றுள்ள இந்த டாஸ்மாக் ஊழல் தொடர்பாக நிச்சயம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், வரும் நாட்களில் அதன் பரிணாமத்தை நாம் அனைவரும் காணலாம் எனவும் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

