ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
”அதிமுகவில் பழம் தின்றுக் கொட்டை போட்டவராக அறியப்படும் செங்கோட்டையனையே எடப்பாடி பழனிசாமி லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வரும் நிலையில், மற்ற சீனியர்கள் எல்லாம் இதில் அரண்டுப்போயிள்ளனர்”

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவை தலைமை ஏற்று நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இது வாழ்வா? சாவா? தேர்தல். இந்த சட்டப்பேரவை தேர்தலில் மட்டும் அதிமுக தோல்வியடைந்துவிட்டால், அவரது தலைமையே கேள்விக்குறியாகி நிர்வாகிகள் எல்லாம் வேறு நிலைப்பாடு எடுக்கத் தொடங்கிவிடுவர் என்பது அனைவருக்கும் தெரிந்த எதார்த்தம்.
இதனால், வரும் சட்டப்பேரவை தேர்தலை மிகுந்த கவனத்தோடு அணுகி வெற்றி பெற என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்ய துணிந்து களம் இறங்கியிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ரகசிய சர்வே – களத்தில் இறங்கிய முன்னாள் உளவுத் துறை
இந்நிலையில், தொகுதி வாரியாக தற்போது எம்.எல்.ஏக்களாக இருப்பவர்களுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது ? அவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ சீட் வழங்கினால் அந்த பகுதியில் வெற்றி பெற முடியுமா ? ஒருவேளை அவர்களை மக்கள் விரும்பவில்லையெனில் வேறு யாருக்கு அதிமுகவில் சீட்டு தரலாம் ? அந்த தொகுதியில் துடிப்பாக மக்களை கவரும் நபர்கள் யார், யார் ? அவர்களது வசதி, வாய்ப்பு என்ன ? என்பது குறித்து ஒரு ரகசிய சர்வே எடப்பாடி பழனிசாமியால் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ரகசிய சர்வேவை தமிழக உளவுத்துறையில் ஐ.ஜி.யாக பணியாற்றியவரும் எடப்பாடி பழனிசாமி சமூகத்தை சேர்வருமான அந்த முக்கிய நபர் ஒருங்கிணைப்பதாகவும் அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் செய்து கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியில் மா.செக்கள், நிர்வாகிகள்
தற்போது சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் தங்களுக்கே வரும் 2026 தேர்தலிலும் சீட் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த ரகசிய சர்வே அவர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. அதோடு, தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் சீட் வாங்கித் தருகிறேன் என்று பல மாவட்ட செயலாளர்களும் சிலரிடம் சில, பல ஸ்வீட் பாக்ஸ்களை இப்போதே பெற்றிருக்கும் நிலையில், அவர்களும் இந்த சர்வே டீமை நினைத்து ஆடிப்போயிருக்கின்றனர்.
சீனியராவது, ஜூனியராவது – எடப்பாடி ராக்ஸ்
வரும் தேர்தலில் சீனியர், ஜூனியர் என்பதெல்லாம் எதுவும் இல்லை. வெற்றி மட்டுமே இலக்கு என செயல்படத் தொடங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் பழம் தின்றுக் கொட்டை போட்டவராக அறியப்படும் செங்கோட்டையனையே அவர் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வருவதை கண்டு அதிமுகவில் மூத்தவர்கள் பலரும் அதிர்ந்து போயிருக்கின்றனர்.
இதனால் தங்களும் இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட அவர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.
சர்வே டீமை கண்டறிந்து காக்க பிடிக்க முயலும் நிர்வாகிகள்
இதே நேரத்தில், மாவட்டத்தில் தொகுதி வாரியாக ரவுண்ட்ஸில் இருக்கும் சர்வே டீம் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்துக் கொடுத்து தங்களுக்கு ஆதரவாக ரிப்போர்ட் அளிக்கும்படி ஒரு சிலர் அவர்களை காக்க பிடிக்க முயற்சித்து வருவதாகவும் ஆனால் இதையெல்லாம் கழுகு போல கண்காணித்து வரும் உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி, தன்னை யாரும் ஏமாற்ற முடியாது என்ற ரேஞ்சில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு சர்வே தங்களுக்கே தெரியாமல் நடப்பதால், எம்.எல்.ஏ சீட் கேட்டு காய்நகர்த்தி வரும் பலரும் அதிர்ச்சியில் உறைந்துப்போய் உள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

