Covai CCTV : பாதாள சாக்கடையில் தவறி விழுந்த இளம்பெண்! திடுக் காட்சிகள்..
கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்று காந்திபுரம் 100 அடி சாலை.இந்த சாலையின் இரு புறங்களிலும் வணிக நிறுவனங்கள் உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே இரு புறங்களிலும் பாதாள சாக்கடையானது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு பாதாள சாக்கடை தூர் வாரப்பட்டு பிறகு ஆங்காங்கே இருந்த பாதாள சாக்கடை மூடிகள் திறந்தபடியே காணப்பட்டன.
இது குறித்து பொதுமக்களும் வணிக நிறுவன உரிமையாளர்களும் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.ஆனால் அந்த தகவலின் பேரில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அவ்வழியே நடந்த சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்துள்ளார்.
இதனால் கால் எலும்பில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தற்போது அப்பெண் சாக்கடை குழிக்குள் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தொடர் அலட்சியப்போக்கு காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் இதே போன்று சாக்கடைக் குழிகள் மூடப்படாமலும் சரிவர சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.