இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த இளைய தளபதி பட்டம் முதலில் எனக்கு தான் கொடுக்கப்பட்டது என நடிகர் சரவணன் கூறியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் வழங்குவது தற்போது வழக்கமாகிவிட்டது. சில உட்ச நடிகர்கள் பட்டத்தை துறந்து பெயர் சொல்லி அழைத்தாலே போதும் என்றும் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் என்னை யாரும் உலகநாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று அறிவித்தார். இது பேசுபொருளானது. இந்நிலையில், நடிகர் சரவணன் தற்போது அளித்த பேட்டியில் விஜய் பயன்படுத்தும் இளையதளபதி பட்டம் எனக்கானது என்று கூறியுள்ளார். இதற்கு பின் என்ன நடந்ததை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இளைய தளபதி பட்டம் வந்தது எப்படி?
பிரபல யூடியூப் சேனலுக்கு சட்டமும் நீதியும் வெப் தொடர் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சரவணன் பேட்டி அளித்திருந்தார். அதில், நான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய சொந்த ஊரான சேலம் பக்கத்தில் ஒரு கூட்டம் நடந்தது. நம்மூர்க்காரன் ஒருத்தன் சினிமாவுக்குப் போயிருக்கான்னு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினாங்க. அப்போது திமுகவில் பெரிய ஆள் வீரபாண்டி ஆறுமுகம். அவர்தான் சிறப்பு விருந்தினராக வந்தார். நான் திமுகவில் இல்லை, எங்க அப்பாவுக்கு அவர் நல்ல நெருக்கம். கூட்டத்தில் பேசிய வீரபாண்டி சினிமாவுக்கு போயாச்சுன்னா ஏதாவது பட்டம் இருக்கனும். அதனால, இவருக்கு "இளைய தளபதி" என்று அழைப்போம் என முதன்முதலா அந்த வார்த்தையை உச்சரிச்சு எனக்கு அவர்தான் அந்தப் பட்டத்தை கொடுத்ததாக சரவணன் தெரிவித்துள்ளார்.
பட வாய்ப்புகள் குறைந்தது
அதன் பிறகு நான் நடித்த நல்லதே நடக்கும் படத்தின் டைட்டில் கார்டில் இளைய தளபதி சரவணன்னு போட்டாங்க. அதைத்தொடர்ந்து சுந்தரம் பிளஸ் 2, அடுத்து நான் தயாரித்த சொந்தப் படம்னு வரிசையா அந்த டைட்டிலைப் பயன்படுத்திட்டு வந்தேன். திடீர்னு எனக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்ததில்லை. விஜயகாந்த் சாயலில் இருக்கான்னு மளமளன்னு வந்த வாய்ப்புகள் திடீர்னு எப்படிக் குறைஞ்சதுனு தெரியலை. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தலையான்னும் புரியலை என சரவணன் தெரிவித்தார்.
விஜய் அப்பா இதை சொன்னார்
இந்த நேரத்தில் நான் சினிமாவில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். எனக்கு துணையாக என் அண்ணனும், எனது பிஏவும் இருந்தார்கள். அப்படி ஒருநாள் விஜய் ஹீரோவாக நடித்து வெளியான ஒரு படத்தில் விஜய் பெயருக்கு முன்னாடி இளைய தளபதி என்ற பட்டத்தை பார்த்து ஷாக் ஆனேன். பின்பு ஒரு நாள் நானும் எனது அண்ணனும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரை பார்த்து எங்க பட்டத்தை பயன்படுத்திருக்கீங்க என்று கேட்டோம். அதற்கு அவர், உங்களுக்கு படம் வந்தா நீங்க போட்டுக்கங்க என்று சொன்னார். அதேநேரம் அடுத்தடுத்த விஜய் படங்களில் இளைய தளபதின்னே போட்டுக்கிட்டு வந்தாங்க. அவர் என்ன நினைத்து சொன்னாரே தெரியலை எனக்கும் சரியான படங்கள் அமையவில்லை. அதன் பிறகு நானும் இளைய தளபதி பட்டத்தையே மறந்துட்டேன் என சரவணன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இதில் இன்னொரு வேடிக்கை என்னன்னா, திமுக காரர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் ஏற்கனவே ஒரு தளபதி இருக்கார்னு எனக்கு இளைய தளபதின்னு அடைமொழி தந்தார். ஆனால் இப்ப விஜய்க்கு தளபதி னே டைட்டில் கார்டுல போட்டுட்டு வராங்க என்று கூறினார்.





















