திருச்சியில் பிரதமர் மோடியின் 8 கிமீ ரோடு ஷோ: பாஜக தொண்டர்கள் உற்சாகம்! முக்கிய அறிவிப்பு வெளியாகுமா?
"பிரதமர் மோடியின் ரோடு ஷோ தகவல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை விட பாஜக தொண்டர்களை வெகு உற்சாகப்படுத்தி உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது"

தஞ்சாவூர்: 8 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி என்ற உலா வரும் தகவலால் பாஜக தொண்டர்கள் வெகு உற்சாகத்தில் உள்ளனர்.
பிரதமரின் ரோடு ஷோ
திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ நடக்க உள்ளதாகத் தகவல் தெரிய வந்துள்ளது. திருச்சியில் கோர்டுயார்டு ஹோட்டல் முதல் விமான நிலையம் வரை சுமார் 8 கிமீ தூரத்திற்கு ரோடு ஷோ திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோடு ஷோ தகவல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை விட பாஜக தொண்டர்களை வெகு உற்சாகப்படுத்தி உள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு வருகிறார். இன்று இரவு தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்து வைக்க உள்ளார். தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின், இரவு அங்கிருந்து விமானம் மூலமாகத் திருச்சி வருகிறார்.
ஆடி திருவாதிரை
இரவில் திருச்சியில் தங்கி ஓய்வு எடுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய தொல்லியல் துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். இதற்காக உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து அரியலூருக்குப் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக செல்கிறார். அதற்கு முன்பாக நாளை காலை பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நாளை காலை காரில் விமான நிலையம் செல்லும் போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சாலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை வழியாக ரோடு ஷோ செல்கிறார். அந்த ரோடு ஷோ தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டைச் சாலை என்று சுமார் 8 கிமீ வரை நீள்கிறது. அதன்பின் விமான நிலையத்திற்குச் சென்று ஹெலிகாப்டர் மூலமாகக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு பொன்னேரி பகுதியில் பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடு ஷோ பாஜக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.





















