Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kias Sonet SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன சோனெட், ஏன் மிகவும் பிரபலமாக உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Kias Sonet SUV: கியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன சோனெட்டின், விலை மற்றும் அம்சங்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
எகிறி அடிக்கும் கியா:
தென்கொரியாவைச் சேர்ந்த கியா நிறுவனத்தின் வளர்ச்சி என்பது, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் அபரிவிதமாக உள்ளது. நடப்பாண்டின் முதல் பாதியில் அதாவது ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 139 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவானதை காட்டிலும் 12.7 சதவிகிதம் அதிகமாகும். சீரான வளர்ச்சியை பதிவு செய்து வரும் கியா நிறுவனத்தின் விற்பனையில், சோனெட் எனப்படும் காம்பேக்ட் எஸ்யுவி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நிறுவனத்தின் சார்பில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் உள்ளது. வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அளவிற்கு அதில் உள்ள அம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
கியா சோனெட் விற்பனை:
கடந்த ஜனவரியில் நிறுவனம் சார்பில் விற்கப்பட்ட 25 ஆயிரத்து 25 யூனிட்களில் 7 ஆயிரத்து 194 யூனிட்கள் சோனெட் மாடலை சேர்ந்ததாகும். தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 7 ஆயிரத்து 598 யூனிட்களும், மார்ச் மாதத்தில் 7 ஆயிரத்து 705 யூனிட்களும், ஏப்ரல் மாதத்தில் 8 ஆயிரத்து 68 யூனிட்களும், மே மாதத்தில் 8 ஆயிரத்து 54 யூனிட்களும், ஜுன் மாதத்தில் 6 ஆயிரத்து 658 யூனிட்களும் சோனெட் மாடலில் விற்பனையாகியுள்ளன. அதாவது நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் கியா சார்பில் விற்பனையான 1.42 லட்சம் வாகனங்களில், 31.8 சதவிகித வாகனங்கள் (45,277 யூனிட்கள்) சோனெட் மாடலை மட்டுமே சார்ந்ததாகும்.
கியா சோனெட் ஏன் பெஸ்ட்?
கியா சொனேட் கார் மாடல் மிகவும் பிரபலமாக இருக்க அதில் இடம்பெற்றுள்ள ஸைடைலான டிசைன், அம்சங்கள் நிறைந்த உட்புறம், இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்களில் கிடைக்கும் அதிகப்படியான ஆப்ஷன்கள் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. ப்ரீமியம் காருக்கான உணர்வை தருவதோடு, நடைமுறைக்கு உகந்ததாகவும், விலைக்கு நிகரான மதிப்புகளையும் கொண்டு கலவையாக, சப்காம்பேக்ட் எஸ்யுவி பிரியர்களுக்கு சரியான தேர்வாக உள்ளது. விலையும் கார் பிரியர்களை ஈர்க்கும் விதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுபோக, கியா நிறுவனம் எனும் பிராண்ட் குறுகிய காலகட்டத்திலேயே இந்தியர்களிடையே நல்ல நம்பிக்கையை பெற்று இருப்பதும், சோனெட்டின் விற்பனைக்கு உந்துகோலாக உள்ளது.
கியா சோனெட் - வெளிப்புற அம்சங்கள்:
கியா நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே, டிசைனுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமே ஆகும். அதன்படி, சோனெட்டில் சிங்கிள் பேன் சன்ரூஃப், புல் டைப் ஹேண்டில்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள், கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ், டூஅல் டோன் பாடி கலர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ், பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ரூஃப் டெயில்கள் உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன. மேலும் புலியின் மூக்கு போன்ற க்ரில், ஸ்போர்ட்டி ஏரோடைனமிக் பம்பர் மற்றும் பின்புற ரூஃப் தேர்வு செய்வதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. 10 ஒற்றை நிற ஆப்ஷன்களும், இரண்டு இரட்டை நிற வண்ண விருப்பங்களும் சோனெட்டிற்கு வழங்கப்படுகின்றன.
கியா சோனெட் - உட்புற அம்சங்கள்:
உட்புறத்தில் கவனத்தை ஈர்கக்கூடிய பல அம்சங்களை சோனெட் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை அனுமதிக்கக் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டட் கார் தொழில்நுட்பம், போஸ் பிரீமியர் 7 ஸ்பீக்கர் சிஸ்டம், முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங், வெண்டிலேடட் சீட்ஸ், ஏர் பியூரிஃபையர், 4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ரியர் ஏசி வெண்ட்ஸ், 60:40 ஸ்ப்லிட் ஃபோல்ட் சீட்ஸ்ரியர் செண்டர் ஆர்ம்ரெஸ்ட், எல்இடி ஆம்பியண்ட் லைட்டிங் என ஏராளமான அம்சங்களை சோனெட் தன்னகத்தே கொண்டுள்ளது.
கியா சோனெட் - பாதுகாப்பு அம்சங்கள்:
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சோனெட்டில் ஏரளமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, டாப் வேரியண்ட்களில் 6 ஏர் பேக்குகள், வாகன ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், EBD உடன் கூடிய ABS, ரியர் பார்கிங் சென்சார் & கேமரா, டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் குழந்தைகளுக்கான ISOFIX ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட்களில் 360 டிகிரி கேமரா மற்றும் ADAS தொழில்நுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பரிசோதனையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.
கியா சோனெட் - இன்ஜின் விவரங்கள்:
பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களிலும் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இதில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் நேட்சுரலி ஆஸ்பிரேடட் 4 சிலிண்டர் இன்ஜின் ஆனது, 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போசார்ஜ்ட் 3 சிலிண்டர் இன்ஜின் ஆனது, இண்டக்ரேடர் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் டூயல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் டீசல் 4 சிலிண்டர் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் சோனெட் காரானது லிட்டருக்கு 18 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
கியா சோனெட் - விலை, போட்டியாளர்கள்:
உள்நாட்டு சந்தையில் இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், மொத்தம் 18 வேரியண்ட்களில் சோனெட் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை சென்னையில் ரூ.9.46 லட்சத்தில் தொடங்கி ரூ.19.20 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது.இந்த கார் ஹுண்டாய் வென்யு, மாருடிதி பிரேஸ்ஸா, டாரா நெக்ஸான் மற்றும் மஹிந்திராவின் XUV3X0 ஆகிய கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.





















