Para Badminton | பாரா பேட்மிண்டனில் இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்தார் ஐஏஎஸ் அதிகாரி
டோக்கியோ பாராபேட்மிண்டன் போட்டியில் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுஹேஷ் யேத்திராஜ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் இன்று காலை நடைபெற்ற முதல் அரையிறுதில் இந்தியாவின் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் மனோஜ் சர்கார் தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுஹேஷ் யேத்திராஜ் 11 நிமிடங்களில் முதல் கேமை 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் தொடக்கத்தில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். எனினும் இரண்டாவது கேமை 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
கர்நாடக மாநில பிறந்தவரான சுஹேஷ் யேத்திராஜ் 2007ஆம் ஆண்டு ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு ஐஏஎஸ் அதிகாரி டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை காலை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சுஹேஷ் யேத்திராஜ் பங்கேற்க உள்ளார்.
SUHAS YATHIRAJ ENTERS FINALS
— IndiaSportsHub (@IndiaSportsHub) September 4, 2021
Indian Para Shutter Suhas Yathiraj has stormed into Finals of SL4 category
Semis | SL4
Suhas #Ind WR3
21-9; 21-15
Fredy #Ina WR4
Gritty performance #Parabadminton pic.twitter.com/ptozpB6Xxq
ஏற்கெனவே எஸ்.எல் 3 பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு உலக சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான இந்தியாவின் பிரமோத் பகத் தகுதி பெற்றுள்ளார். அவர் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் பெத்தேலை எதிர்த்து விளையாட உள்ளார்.
அடுத்ததாக காலை 10 மணிக்கு நடைபெறும் எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடுகிறார். அதைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
மேலும் படிக்க:பாரா பேட்மிண்டனில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் உலக சாம்பியன் பிரமோத் பகத் !