(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Paralympics | பாரா பேட்மிண்டனில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் உலக சாம்பியன் பிரமோத் பகத் !
டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் பாரா பேட்மிண்டன் பிரிவில் 5 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 5 வீரர்களும் 2 வீராங்கனைகளும் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் ஃபூஜிஹாரா தாயுசுக்கை எதிர்த்து விளையாடினார். எஸ்.எல் 3 பிரிவில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரர் பிரமோத் பகத் என்பதால் இந்தப் போட்டியில் அவர் வெற்றி பெறுவார் என்று அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி 15 நிமிடங்கள் நடைபெற்ற முதல் கேமை பிரமோத் பகத் 21-11 என்ற கணக்கில் எளிதாக வென்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது கேமையும் பிரமோத் பகத் 21-16 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டன் வரலாற்றில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார். இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க உள்ளார்.
PRAMOD BHAGAT ENTERS FINALS
— IndiaSportsHub (@IndiaSportsHub) September 4, 2021
The reigning World & Asian Champion. Current World Rank 1 Pramod Bhagat has entered the Finals of #Paralympics2020
Semis | SL3
Pramod #Ind WR1
21-11, 21-16
Daisuke #Jpn WR5#ParaBadminton
Can Manoj join him in finals, watch now pic.twitter.com/jos5wQDIt0
அடுத்ததாக எஸ்.எல் 3 பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் மற்றொரு இந்திய வீரர் மனோஜ் சர்கார் பிரிட்டன் வீரர் டேனியலை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து எஸ்.எல் 4 பிரிவு அரையிறுதி போட்டியில் தருண் தில்லான் பிரான்சு வீரர் லூகஸை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி காலை 7.45 மணிக்கு தொடங்குகிறது. அதேபிரிவில் மற்றொரு அரையிறுதியில் இந்திய வீரரும் ஐஏஎஸ் அதிகாரியுமான சுஹேஷ் யேத்திராஜ் இந்தோனேஷிய நாட்டின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியும் இந்திய நேரப்படி காலை 7.45 மணிக்கு தொடங்குகிறது.
இதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு நடைபெறும் எஸ்.ஹெச் 6 பிரிவு அரையிறுதி போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் வீரர் கூம்ஸ் கிரெஸ்டனை எதிர்த்து விளையாடுகிறார். அதைத் தொடர்ந்து பிரமோத் பகத் மற்றும் பாலக் கோலி இணை கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தோனேஷியாவின் ஹரி சுசான்டோ-லியானி இணையை எதிர்த்து விளையாட உள்ளது.
மேலும் படிக்க:இப்பவே 13 மெடல்... இன்னும் முடியல... பாராலிம்பிக் வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா!