MI Vs RR, IPL 2024: உள்ளூரில் வெச்சு செய்த சாம்சனின் ராஜஸ்தான் - இன்றைய லீக் போட்டியில் பழிவாங்குமா ஹர்திக்கின் மும்பை?
MI Vs RR, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
MI Vs RR, IPL 2024: மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி, இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகளும் தலா ஒருமுறை நேருக்கு நேர் சந்தித்து, தொடரின் பாதி போட்டிகள் முடிந்துள்ளன. தற்போது இரண்டாவது சுற்று லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.
ராஜஸ்தான் - மும்பை பலப்பரீட்சை:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் இண்டோர் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஆறில் வென்று, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியிலும் வென்று முதலிடத்தில் நீடிக்க அந்த அணி முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், மும்பை அணியோ விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 4 தோல்வி என புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே, உள்ளூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தானிடம் மும்பை அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அந்த தோல்விக்கு பழிவாங்க மும்பை அணி தீவிரம்காட்டி வருகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் களமிறங்குவது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. சாம்சன், பட்லர், பராக் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் அதகளம் செய்கின்றனர். போல்ட், சாஹல் மற்றும் அஷ்வ்ன் ஆகியோர் பந்துவீச்சில் வலு சேர்க்கின்றனர். உள்ளூர் மற்றும் வெளியூர் என இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் மும்பை அணியில் ரோகித் சர்மா நடப்பாண்டில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் சொதப்புகின்றனர். பந்துவீச்சிலும் பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்களை வார் வழங்குகின்றனர். இதனால், வலுவான ராஜஸ்தான் அணியை வீழ்த்த மும்பை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 15 முறையும், ராஜஸ்தான் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 212 ரன்களையும், குறைந்தபட்சமாக 90 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 214 ரன்களையும், குறைந்தபட்சமாக 92 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
மைதானம் எப்படி?
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில் விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று சவாலானதாக இருந்தாலும், போட்டி செல்ல செல்ல சூழல் மேம்படும். சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு சாதிக்க முடியும்.
உத்தேச அணி விவரங்கள்:
மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்பிரிட் பும்ரா
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்