மக்களே நல்ல செய்தி வந்திருச்சு! இரவிலும் பறக்கலாம்.. 381 கோடியில் அப்டேட்.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி விமான நிலையம்
Thoothukudi Airport: விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 26ம் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

Thoothukudi Airport Expansion: பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி வரும் ஜூலை 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.
தொழிற்துறையில் தூத்துக்குடி
தென் தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கபடும் தூத்துக்குடி முக்கிய தொழில் நகராக விளங்கி வருகிறது. தூத்துக்குடியில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளது , விமானம், கப்பல், ரயில், சாலை என நான்கு திசைகளிலும் தூத்துக்குடி நகரத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியை அடுத்த வாகை குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
விமான நிலைய வரலாறு:
1992ம் ஆண்டு ஓடுதளம் அமைத்து தொடங்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில், ஆரம்பத்தில் 1,350 மீட்டர் ஓடுதளத்துடன் சிறிய விமானங்களுக்கே அனுமதி இருந்தது. ஏப்ரல் 13ம் தேதி வாயுதூத் விமானம் மூலம் சென்னைக்கான முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் குறைந்த பயணிகள் எண்ணிக்கையால் 14 மாதத்தில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் சேவை தொடங்கப்பட்ட போதும் 6 மாதத்தில் நிறைவு பெற்றது. 2006ல் ஏர் டெக்கான் நிறுவனம் மூலமாக மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.
பயணிகள் வரவேற்பு அதிகரிப்பு:
தூத்துக்குடியை சுற்றி பல நிறுவனங்கள், வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை என பல தொழிற்துறை முன்னேற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கான 9 விமான சேவைகள் உள்ளது. மக்கள் அதிக எண்ணிக்கையில் இவ்விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி அனைத்து விமானங்களும் முழு பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.
புதிய பயணிகள் முனையம்:
பயணிகளின் தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, ரூ.381 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி, புதிய பிரமாண்ட பயணிகள் முனையம், இரவு நேர விமான சேவையை இயக்கும் வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டு விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26ம் தேதி திறப்பு:
விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 26ம் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மாலத்தீவிலிருந்து தனியார் விமானத்தில் தூத்துக்குடிக்கு வரும் பிரதமர், இரவு 8 மணிக்கு விமான நிலையத்துக்குத் திரும்பி, 9.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்கிறார். இந்த விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முக்கிய ஆலோசனை கூட்டம்:
தற்போது இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.






















