IPL Mega Auction 2022: சின்ன தல சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே ஓரம் கட்ட இதுதான் காரணமா?
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் முதல் சுற்றில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் நேற்று நடைபெற்றது. நேற்று சுமார் 161 வீரர்களை வரை ஏலத்தில் எடுத்து கொள்ளப்பட்டனர். இதில் முதல் சுற்றில் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித், ஷிகிப் அல் ஹசன்,சாம் பில்லிங்ஸ்
மேத்யூ வேட், உமேஷ் யாதவ்,அடில் ரஷித், இம்ரான் தாஹிர், ஆடம் ஸம்பா, அமித் மிஸ்ரா, டேவிட் மில்லர்,முகமது நபி உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட முதல் சுற்றில் எடுக்கவில்லை. இது ரெய்னா ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி ரெய்னாவை குறிவைக்காததற்கு காரணம் என்ன? ரெய்னா இல்லை என்றால் சிஎஸ்கேவிற்கு பலவீனமா?
மிஸ்டர் ஐபிஎல்:
ஐபிஎல் தொடரில் தோனியை போல் 2008ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடி வருகிறார். இவர் மொத்தம் நடைபெற்றுள்ள 14 ஐபிஎல் தொடர்களில் 12ல் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். இதன்காரணமாகவே இவரை சென்னை ரசிகர்கள் சின்ன தல என்று பாசமாக அழைப்பார்கள். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் சீசனில் 421 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் இரண்டாவது சீசனில் 434 ரன்கள் அடித்தார். 2014ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் வரை சுரேஷ் ரெய்னா அனைத்து சீசன்களிலும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார்.
2014 வரை ரெய்னா அடித்த ஐபிஎல் ரன்கள்:
ஆண்டு | போட்டிகள் | ரன்கள் |
2008 | 16 | 421 |
2009 | 14 | 438 |
2010 | 16 | 520 |
2011 | 16 | 438 |
2012 | 19 | 441 |
2013 | 18 | 548 |
2014 |
16 | 523 |
அதாவது 2008 முதல் 2014 வரை தொடர்ச்சியாக அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் இவர் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். இதன்காரணமாகவே இவர் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்பட்டார்.
ஐபிஎல்-லில் சுரேஷ் ரெய்னாவின் சறுக்கல்:
இப்படி சிறப்பாக ஆடி வந்த சுரேஷ் ரெய்னாவை 2018ஆம் ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணி தக்கவைத்தது. அந்த 2018ஆம் ஆண்டு தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் திரும்ப வந்த போது 15 போட்டிகளில் விளையாடி 445 ரன்கள் அடித்தார். எனினும் 2019ஆம் ஆண்டு முதல் இவர் சொதப்ப தொடங்கினார். அந்த ஆண்டு நடைபெற்ற 17 போட்டிகளில் விளையாடி 383 ரன்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங் மட்டுமல்லாமல் ஃபீல்டிங்கிலும் இவர் சற்று மோசமாக செயல்பட தொடங்கினார். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக இவர் திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் இவர் 160 ரன்கள் மட்டுமே அடித்தார்.
ரெய்னா இல்லாத சிஎஸ்கே:
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முதல் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரை சுரேஷ் ரெய்னா முக்கிய பங்கு வகித்தார். அதன்பின்னர் அம்பாத்தி ராயுடு, ஷேன் வாட்சன், டூபிளசிஸ் போன்ற வீரர்கள் சிறப்பாக ஆட தொடங்கியதால் ரெய்னாவின் பங்கு மிகவும் குறைய தொடங்கியது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா உள்ளிட்ட வீரர்களும் அணியின் பேட்டிங்கிற்கு டாப் ஆர்டரில் கூடுதல் பலம் சேர்த்தனர். இதன்காரணமாக ஃபார்மை இழந்த ரெய்னா சிஎஸ்கே அணியில் அதிகமாக முக்கியத்துவம் பெறவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் கூட இறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக ராபின் உத்தப்பா களமிறக்கப்பட்டார். ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரெய்னாவை தாண்டி இளம் வீரர்கள் பக்கம் திரும்பியுள்ளது. இதன்காரணமாகவே சுரேஷ் ரெய்னாவிற்கு சென்னை அணி இம்முறை குறி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: IPL Mega Auction 2022 LIVE: ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் - இரண்டாவது நாள்: இன்று காலை மீண்டும் தொடக்கம் !
மேலும் படிக்க:இரண்டாவது நாள் ஏலத்திற்கு முன்பாக எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை மீதமுள்ளது?