IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
ஐபிஎல் தொடரிலும், ஐபிஎல் தொடரின் நேரலையிலும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்கள் இடம்பெற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் ஐபிஎல். டி20 வடிவத்திலான இந்த தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வர்த்தகம் இந்த ஐபிஎல் தொடர்களில் நடக்கிறது.
மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை:
இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகள் நடக்கும்போது புகையிலை, மது உள்ளிட்டவை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகள் நடக்கும் இடங்களிலும் ஐபிஎல் தொடர் தொடர்பான விளம்பரங்களிலும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்கள் இடம்பெறவும் தடை விதிக்கப்பட்டள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் தொலைக்காட்சிகளிலும் ஐபிஎல் தொடர்பான விளம்பரங்களில் மது மற்றும் புகையிலை தொடர்பாகவும் இடம்பெற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை கடிதம்:
இந்த விவகாரம் தொடர்பாக ஐபிஎல் சேர்மன் அருண்சிங் தாமுல் மற்றும் பிசிசிஐக்கு, சுகாதாரத்துறையின் இயக்குனர் அதுல் கோயல் இதுதொடர்பாக மார்ச் 5ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். மேலும், வீரர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே புகையிலை மற்றும் மது தொடர்பானவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது, புகையிலை விற்பனை:
கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புகையிலை மற்றும் மது விற்பனையில் உலக அரங்கில் இந்தியாவின் வர்த்தகம் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவில் புகையிலை மற்றும் மது விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. பெரும்பாலான முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மது மற்றும் புகையிலை போன்ற விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதில் பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சுமார் 2 மாதங்கள் நடக்கும் இந்த ஐபிஎல் தொடரில் தோனி, ரோகித், கோலி ஆகிய பிரபல வீரர்கள் விளையாடுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

