Commonwealth Games: மிஷன் 2036.. காமன்வெல்த் போட்டிகளை நடத்த தயார்.. இந்தியாவின் மாஸ்டர் பிளான்
Commonwealth Games 2030: 2036 ஒலிம்பிக்கிற்கு முன்பு, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியாவும் விண்ணப்பித்துள்ளது.

2030 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்திய விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காமன்வெல்த் போட்டிகள்:
2036 ஒலிம்பிக்கிற்கு முன்பு, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியாவும் விண்ணப்பித்துள்ளது. 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) மார்ச் 13, 2025 அன்று காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிற்கு (CGF) போட்டி தொடரை நடத்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியா கடைசியாக 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் ஆர்வத்தை முறையாக வெளிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி இந்திய ஒலிம்பிக் அமைப்பு ஏற்கனவே ஒரு விருப்பக் கடிதத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதற்கு நடத்தப்பட்டதில்லை.
முன்னதாக, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நடத்துவதாக இருந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால், முதன்மையாக நிதி பற்றாக்குறை காரணமாக, போட்டியை நடத்தும் நாடு விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகியது. அதன் பிறகு, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு மாற்றாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவை காம்வெல்த் அமைப்பு தேர்வு செய்தது.
நீக்கப்பட்ட போட்டிகள்:
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஹாக்கி, பேட்மிண்டன், மல்யுத்தம் மற்றும் துப்பாக்கிச் சூடு போன்ற இந்தியாவில் பிரபலமாக உள்ள சில விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான இடம் மாற்றப்பட்டதால், முந்தைய விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது பட்ஜெட், காலக்கெடு மற்றும் விளையாட்டுத் திட்டம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது என்றும், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு 10 விளையாட்டுகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்றும் விளையாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மீண்டும் வாய்ப்பு:
"பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ் மற்றும் மல்யுத்தம் போன்ற 9 முக்கிய விளையாட்டுகளை விலக்குவது குறித்து CGF தலைவருக்கு அரசாங்கம் கடிதம் எழுதியது. 2026 விளையாட்டுகளைப் பாதுகாப்பதற்கான தற்காலிக நிலைப்பாடு 10 விளையாட்டுத் துறைகள் மட்டுமே என்றும், எந்தவொரு விளையாட்டையும் விலக்குவது எதிர்கால விளையாட்டுகளில் சேர்ப்பதற்கான முன்னுதாரணத்தை அமைக்காது என்றும் CGF தலைவர் பதிலளித்துள்ளார்," என்று விளையாட்டு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட்டுத் துறையைச் சேர்ப்பது குறித்த முடிவுகளை CGF மற்றும் சம்பந்தப்பட்ட போட்டி நடத்தும் நாடு எடுக்கின்றன. CGF என்பது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு இயக்கம் மற்றும் பிற தொடர்புடைய நிகழ்வுகளின் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பான அமைப்பாகும்.
போட்டிகளை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு கிடைத்தால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி ஆக உள்ள நிலையில் இந்தியா அதற்கு முன்னதாகவே தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

