IPL 2025 PBKS vs LSG: பஞ்சாப் பலே பலே! சரிந்து மீண்ட லக்னோ! ஸ்ரேயாஸ் படைக்கு டார்கெட் இதுதான்?
IPL 2025 PBKS vs LSG: பஞ்சாப் அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் பஞ்சாப் - லக்னோ அணிகள் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய லக்னோவிற்கு பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்சி தந்தனர்.
ஷாக் தந்த லக்னோ:
தொடக்க வீரர் மிட்செல் மார்ஷை அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாக்கினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மறுமுனையில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த மார்க்ரமை பெர்குசன் காலி செய்தார். அவரது பந்துவீச்சில் மார்க்ரம் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதன்பின்னர், கேப்டன் ரிஷப்பண்ட் களமிறங்கினார். கடந்த 2 போட்டியில் சொதப்பிய ரிஷப்பண்ட் இந்த போட்டியில் பொறுப்புடன் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 2 ரன்களில் மேக்ஸ்வெல் சுழலில் அவுட்டானார். இதனால், 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது லக்னோ. அப்போது, பூரண் - பதோனி ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர்.
மிரட்டிய பூரண்:
பதோனி நிதானம் காட்ட பூரண் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினார். இதனால், தடுமாறிக் கொண்டிருந்த லக்னோ ஸ்கோர் உயரத் தொடங்கியது. ஆனாலும், அதற்கு சாஹல் முட்டுக்கட்டை போட்டார். அவரது மாயாஜால சுழலில் பூரண் சிக்கினார். அவர் 30 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் சாஹல் சுழலில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர், களமிறங்கிய டேவிட் மில்லர் பவுண்டரிகளாக விளாச அவரையும் ஜான்சன் காலி செய்தார். அவரது பந்துவீச்சில் டேவிட் மில்லர் 18 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இதனால், 119 ரன்களுக்கு லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், கடைசி 4 ஓவர்களில் கட்டாயம் அதிரடி காட்ட வேண்டிய சூழலுக்கு லக்னோ ஆளானது.
கடைசியில் கலக்கிய பதோனி - சமத்:
லக்னோ அணிக்காக பதோனி, சமத் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடினர். இவர்களது அதிரடியால் 18வது ஓவரில் 150 ரன்களை கடந்தது. குறிப்பாக அர்ஷ்தீப்சிங் வீசிய 18வது ஓவரில் ரன்மழை பொழிந்தனர். சமத் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் இந்த ஓவரில் விளாசினார். முதல் 2 ஓவர்களை அர்ஷ்தீப்சிங் கட்டுக்கோப்பாக வீசிய நிலையில் அவரது கடைசி 2 ஓவரில் பதோனி - சமத் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை எடுத்தது. ஆனால், பதோனியை அர்ஷ்தீப்சிங் காலி செய்தார். லக்னோவிற்காக சிறப்பாக ஆடிய பதோனி 33 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி ஓவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிராக அர்ஷ்தீப்சிங் சிறப்பாக வீசினார். இதனால், லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.


















