"பெங்கால் புலி நானு.. முடிஞ்சா பிடிச்சு பாருங்க" இடதுசாரி மாணவர்களை கதறவிட்ட மம்தா.. லண்டனில் சம்பவம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்ற மம்தா பானர்ஜிக்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா உரையாற்றும்போது, கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற சென்ற மம்தா பானர்ஜிக்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா உரையாற்றும்போது, கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். அதற்கு பதிலடி அளித்து பேசிய மம்தா, "நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். ராயல் பெங்கால் புலி போல நடந்து வருவேன்" என சவால் விடுத்துள்ளார்.
மம்தாவுக்கு எதிராக கொதித்த மாணவர்கள்:
பிரிட்டன் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரிக்கு மம்தா சென்றிருந்தார்.
மேற்குவங்கத்தில் 2023 பஞ்சாயத்து தேர்தலின் போது நடந்த வன்முறை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் மகனால் மைனர் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், பாலியல் வன்கொடுமை குறித்து கடந்த 2012ஆம் மம்தா தெரிவித்த சர்ச்சை கருத்து உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி எஸ்எப்ஐ (பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு) அமைப்பை சேர்ந்த மாணவர்கள், மம்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலடி கொடுத்து பேசிய மம்தா, "நீங்க என்னை வரவேற்கிறீங்க, நன்றி. நான் உங்களுக்கு இனிப்புகள் வழங்குவேன்" என கூறினார். ஆர். ஜி. கர் மருத்துவமனையில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மம்தா, "தயவுசெய்து உங்கள் குரலை உயர்த்துங்கள். இது ஒரு ஜனநாயகம். தயவுசெய்து உங்கள் குரலை உயர்த்துங்கள். நான் கேட்பேன். நான் கவனமாகக் கேட்பேன்.
லண்டனில் மாஸ் காட்டிய இடதுசாரிகள்:
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். மத்திய அரசு அதை கையில் எடுத்துள்ளது. அது எங்களிடம் இல்லை. தயவுசெய்து இங்கே அரசியல் செய்யாதீர்கள். இது அரசியல் செய்வதற்கான இடம் இல்லை. என் மாநிலத்தில் நீங்கள் என்னுடன் அதைச் செய்யலாம். இங்கே இல்லை" என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை "சகோதரரே" என்று அழைத்த மம்தா, "அதைச் செய்யாதே. உங்கள் மீது எனக்கு பாசம் இருக்கிறது. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இதை ஒரு அரசியல் தளமாக மாற்ற முயற்சிக்காதீர்கள். நீங்கள் இதை ஒரு அரசியல் தளமாக மாற்ற விரும்பினால், வங்காளத்திற்குச் சென்று, உங்கள் கட்சியை வலுவாக இருக்கச் சொல்லுங்கள், வகுப்புவாத அரசியல் செய்பவர்களுக்கு எதிராகப் போராடுங்கள். என்னுடன் சண்டையிட வேண்டாம்.
நான் இந்து, முஸ்லிம், சீக்கியர். நான் அனைவருக்காகவும் இருக்கிறேன். நான் ஒற்றுமைக்காக இருக்கிறேன். நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் என்னை ஊக்குவிக்கிறீர்கள். இங்கு, ஒவ்வொரு முறையும் வருவேன். யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன். ஒரு ராயல் பெங்கால் புலி போல நடப்பேன். உங்களால் என்னைப் பிடிக்க முடிந்தால், என்னைப் பிடிக்கவும்" என்றார்.





















