இந்தியில் செல்ஃப் எடுக்காத சிகந்தர்...மதராஸி நிலை என்ன ? மரண பீதியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்...
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிகந்தர் படம் படுசுமாரான வரவேற்பைப் பெற்றுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொஞ்சம் அச்சமடைந்துள்ளார்கள்

சிகந்தர்
ரமணா, கஜினி , துப்பாக்கி என பல முக்கியமான கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர் முருகதாஸ். ஆனால் இந்த படங்களைத் தவிர்த்து முருகதாஸ் இயக்கிய தர்பார், சர்ககார் ஆகிய படங்கள் ரசிகர்களை பெரியளவில் திருப்தி படுத்தவில்லை என்றுதான் சொல்லனும். அந்த வகையில் தற்போது இந்தி தமிழ் என இரு மொழிகளில் அடுத்தடுத்து படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ். முன்னணி பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்துள்ள சிகந்தர் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார். கடந்த மார்ச் 30 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
சிகந்தர் பட வசூல்
சிகந்தர் படத்திற்கு ஆரம்பம் முதலே பயங்கர நெகட்டிவான விமர்சனங்களே வெளியாகி வருகின்றன. சலித்துப்போன திரைக்கதை வெறும் ஆக்ஷன் , சல்மான் கானின் சுமாரான நடிப்பு என ரசிகர்கள் இப்படத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள். போதாத குறைக்கு சிகந்தர் திரைப்படம் இரண்டு நாட்களில் 63.42 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படியே போனால் படத்தின் பட்ஜெட்டிற்கு செலவிட்ட பணத்தை கூட திருப்பி எடுக்க முடியாத நிலை வருமோ என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பீதியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்
இன்னொரு பக்கம் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய ஆதரவு இருந்து வருகிறது. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மினி வசந்த் , விக்ராந்த் , பிஜூ மேனன் , வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது மதராஸி திரைப்படம். இந்த படத்திற்காக எஸ்.கே ரசிகர்கள் ஆர்வமாக காத்து வந்த ரசிகர்கள் தற்போது சிகந்தர் படத்திற்கு நெகட்டிவ் ரிவியு வருவதைப் பார்த்து கொஞ்சம் பீதியில் உள்ளார்கள் என்று சொல்லலாம்





















