Rishabh Pant: சொதப்பு சொதப்புனு சொதப்பும் ரிஷப் பண்ட்! 27 கோடி இப்படி போகுதே!
IPL PBKS vs LSG: லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நடப்பு தொடரில் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2025 PBKS vs LSG: ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் இன்று போட்டி நடந்து வருகிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
2 ரன்னில் ரிஷப் பண்ட் அவுட்:
இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய லக்னோ அணி தடுமாறி வருகிறது. தொடக்க வீரர் மார்ஷ் டக் அவுட்டாக, அந்த அணிக்காக அதிரடி காட்டிய மார்க்ரம் 28 ரன்னில் அவுட்டானார். அவர் 18 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு பூரணுடன் கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். 32 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய கேப்டன் ரிஷப்பண்ட் 5 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் சுழலில் அவுட்டானார்.
தொடர்ந்து சொதப்பல்:
இந்த தொடரில் 3 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ரிஷப்பண்ட் தொடர்ந்து சொதப்பலாக பேட்டிங் செய்து வருகிறார். முதல் போட்டியில் அவர் டக் அவுட்டாக, இரண்டாவது போட்டியில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக 2 ரன்களில் அவுட்டானார்.
டெல்லி அணிக்காக தொடர்ந்து ஆடி வந்த ரிஷப்பண்ட் கடந்தாண்டுதான் ஏலத்திற்கு வந்தார். ஏலத்தில் பல அணிகளும் அவரை எடுக்க கடும் போட்டி போட்டு வந்த நிலையில், அவரை லக்னோ அணி ஏலத்தில் எடுத்தது, 27 கோடி ரூபாய்க்கு கடந்த ஏலத்தில் ஏலம் போன ரிஷப்பண்டே ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஆவார்.
இந்திய அணியின் நட்சத்திரம்:
கேப்டன்சி மற்றும் அதிரடிக்காகவே இவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட நிலையில், இவரது தலைமையில் லக்னோ அணி இந்த சீசனில் களமிறங்கிய முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக தோற்றாலும், இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அணி வெற்றி பெற்றாலும் ரிஷப்பண்ட்டின் பேட்டிங் கவலை அளிக்கும் வகையிலே இருந்தது. இந்த போட்டியிலும் அது தொடர்கிறது.
ரிஷப்பண்ட் ஐபிஎல் தொடர் மட்டுமின்றி இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர் ஆவார். இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பரான இவர் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் ஆடவைக்கப்படவில்லை. இருப்பினும் அடுத்து இந்திய அணியின் எதிர்கால தொடர்களில் ரிஷப்பண்ட் பிரதான விக்கெட் கீப்பராக இடம்பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
காத்திருக்கும் சர்வதேச தொடர்:
அதேசமயம் கே.எல்.ராகுலுக்கும் அவருக்கும் விக்கெட் கீப்பிங்கில் போட்டி உள்ளது. இந்த சூழலில், அவர் முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக ஸ்டம்பிங்கிலும் கோட்டை விட்டார். கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் ரிஷப் பண்ட்டின் செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் இருப்பது லக்னோ அணியின் நிர்வாகம் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால் ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற பலமிகுந்த அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்த தொடர்களுக்கு ஒரு பயிற்சியாகவே ஐபிஎல் தொடர் உள்ளது. மேலும், அடுத்தாண்டு டி20 உலகக்கோப்பையும் நடைபெற உள்ளது. அணியில் நீடித்த இடம்பிடிக்கவும், அணியின் பிரதான விக்கெட் கீப்பராக இடம்பிடிக்கவும் ரிஷப்பண்ட் சிறப்பான ஆட்டத்திற்கு திரும்ப வேண்டியது அவசியம் ஆகும். ரிஷப்பண்ட் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பிவிட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பேக் தருவாரா?
27 வயதான ரிஷப்பண்ட் 114 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 301 ரன்களை எடுத்துள்ளார். அதில் 18 அரைசதம், 1 சதம் அடங்கும். அதிகபட்சமாக 128 ரன்களை எடுத்துள்ளார். ஏற்கனவே டெல்லி அணியை வழிநடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. ரிஷப்பண்ட் விரைவில் தனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

