Messi: உலகக்கோப்பைன்னா மெஸ்ஸி ரொம்ப பிஸி..! அனைத்திலும் டாப்... இடைவிடாத நான் - ஸ்டாப் ரெக்கார்ட்!
ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

22வது கால்பந்து உலகக்கோப்பை போட்டியானது கத்தாரில் மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் களமிறங்கி, லீக் போட்டிகள், நாக் - அவுட் சுற்று, கால் இறுதி சுற்றுகளைக் கடந்து போட்டித் தொடரானது அரை இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய முதலாவது அரை இறுதிப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணியும், முதலாவது உலகக்கோப்பையை வெல்ல பெரும் கனவு கண்ட குரோஷிய அணியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
போட்டியின் ஆரம்பம் முதலே அர்ஜெண்டினா அணியானது ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. குரோஷிய அணி தாங்கள் கோல் அடிக்க வேண்டும் என்பதற்காக விளையாடியதைவிட, அர்ஜெண்டினாவை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விளையாடிய நிமிடங்களே அதிகம்.
மெஸ்ஸி
போட்டியின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி - ஷாட்டை அணியின் கேப்டனும் உலகத்தரமான கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக கோல் அடித்து அணியையை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல முயற்சித்தார் என்பதை விட, உலகக்கோப்பைக்கு அருகில் கொண்டு சென்றார் என்றே கூறவேண்டும்.
அதன் பின்னர், அர்ஜெண்டினாவின் ஜுவாலியன் ஆல்வரிஸ் போட்டியின் 39வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியில், 2 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதிக்கு பின்னர், இரு அணிகளுமே போட்டியினை விறுவிறுப்பாக்கினர். ஆனால் அதற்கு மீண்டும் பலன் கிடைத்ததெல்லாம், அர்ஜெண்டினாவுக்குத்தான். போட்டியின் 69வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி மிகவும் சாதூர்யமாக பந்தை பாஸ் செய்ய ஜுவாலியன் ஆல்வரிஸ் நொடிப்பொழுதில் கோலாக மாற்றினார். இதனால், 3 - 0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை வகித்து, உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அணித்தலைவர் மெஸ்ஸிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது இவருக்கு உலகக் கோப்பை தொடரில் 10வது ஆட்டநாயகன் விருதாகும். இதன் மூலம், ஃபிபா உலகக் கோப்பை தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, ஃபிபா உலகக் கோப்பையில் 7 முறை ஆட்டநாயகன் விருது பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். டச்சு நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் அர்ஜென் ராபன் 6 ஆட்டநாயகன் விருது பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
🏅Most FIFA World Cup MOTM
— FIFA World Cup Stats (@alimo_philip) December 13, 2022
🥇🇦🇷 Lionel Messi-10
🥈🇵🇹 Cristiano Ronaldo-7
🥉🇳🇱 Robben-6
🏅Most MOTM at a Single World Cup
🥇2010:🇳🇱Wesley Sneijder-4
🥇2014:🇦🇷Messi-4
🥇2022:🇦🇷Messi-4
🔥Most World Cup Wins
🥇🇩🇪Miroslav Klose-17
🥈🇦🇷Messi-16#FIFAWorldCup|#Messi𓃵|#ARG pic.twitter.com/6fy5fJSbAs
மேலும் பல மெஸ்ஸியின் ரெக்கார்ட்கள்:
ஒற்றை உலகக் கோப்பை தொடரில் அதிக ஆட்டநாயகன் விருது:
- 2010: வெஸ்லி ஸ்னெய்டர்-4
- 2014: மெஸ்ஸி-4
- 2022 மெஸ்ஸி-4
ஃபிபா உலகக் கோப்பை தொடரில் இதுவரை 10 முறை ஆட்டநாயகன் விருது பெற்றுள்ள மெஸ்ஸி, 2014 மற்றும் 2022 ம் ஆண்டில் மட்டும் தலா 4 முறை ஆட்டநாயகன் விருது வாங்கியுள்ளார். இதன் மூலம், ஒற்றை உலகக் கோப்பை தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2010 ஆண்டு டச்சு கால்பந்து வீரர் வெஸ்லி ஸ்னெய்டர் ஒருமுறை மட்டுமே ஒற்றை உலகக் கோப்பை தொடரில் 4 ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
அதிக வெற்றிகள்:
- மிரோஸ்லாவ் க்ளோஸ்-17
- மெஸ்ஸி-16
ஃபிபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, இதுவரை 16 வெற்றிகள் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியின் வெற்றியின் மூலம் ஒரு கேப்டனின் தலைமையில் பெற்ற அதிக வெற்றிபெற்றவர்கள் பட்டியலில் மெஸ்ஸி இரண்டாம் இடத்தில் உள்ளார். ஜெர்மன் கால்பந்து வீரர் மிரோஸ்லாவ் க்ளோஸ் 17 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

