கிண்டியில் துப்பாக்கியால் மிரட்டல் விடுத்த நபர்... நடந்தது என்ன?
இடத்தை காலி செய்ய கூறி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது. 1 துப்பாக்கி 6 தோட்டக்கள் மற்றும் 1 கார் பறிமுதல்.

இருவருக்குள் ஏற்பட்ட தகராறு
சென்னை கிண்டி கன்னிகாபுரம் பகுதியில் வசித்து வரும் சக்கரேஸ்வரன் ( வயது 54 ) என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 04.07.2025 அன்று காலை, நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது , அந்நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகர் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு , நிறுவனத்திற்குள் உள்ளே தகராறு நடந்து வருவதாகவும், அதை உள்ளே சென்று பார்க்குமாறும் கூறியதன்பேரில் , சக்கரேஸ்வரன் நிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மதுசூதனன்ரெட்டி மற்றும் ராமையா ஆகிய இருவரும் சேர்ந்து மகேந்திரன் என்பவரிடம் தகராறு செய்துள்ளனர்.
இடத்தை காலி செய்யனும் - துப்பாக்கியால் மிரட்டல்
சக்கரேஸ்வரன், மதுசூதனன்ரெட்டி மற்றும் ராமையா ஆகிய இருவரிடமும் ஏன் தகராறு செய்கிறீர்கள், நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகர் வந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அப்போது மதுசூதனன் ரெட்டி என்பவர் சக்கரேஸ்வரரை தகாத வார்த்தைகள் பேசி , துப்பாக்கியை காட்டி, இந்த இடத்தை விட்டு அனைவரும் காலி செய்து விட்டு செல்ல வேண்டும் என்றும் இல்லையென்றால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டி விட்டு, அங்கிருந்து காரில் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சக்கரேஸ்வரன், J-3 கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மதுசூதனன்ரெட்டி ( வயது 62 ) ஆந்திரா மாநிலம் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 துப்பாக்கி, 6 தோட்டாக்கள், துப்பாக்கி உரிமை ஆவணம் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மேற்படி நிறுவனம் வாடகைக்கு செயல்பட்டு வருவதும் அந்த இடத்தின் உரிமையாளரின் உறவினரான எதிரி மதுசூதனன் ரெட்டி என்பவர் மேற்படி இடத்திற்கு சென்று , நிறுவனத்தை காலி செய்யுமாறு தகராறு செய்து, சக்கரேஸ்வரனை துப்பாக்கியை காட்டி மிரட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மதுசூதனன்ரெட்டி, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மெரினா பகுதியில் மாவா பாக்கெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது
சென்னை பெருநகரில் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக , D-5 மெரினா காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் நீலம்பாஷா தர்கா அருகே, அங்கு சந்தேகத்திற்கிடமாக பிளாஸ்டிக் பை ஒன்றினை கையில் வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த பெண் ஒருவரை பிடித்து அவரது பையை சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மாவா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் D-5 மெரினா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக மாவா புகையிலை பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்த தேவி ( வயது 38 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.040 கிலோ கிராம் எடையுள்ள 52 மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தேவி மீது ஏற்கனவே 5 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட தேவி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















