T20 WC 2024: அடேங்கப்பா! பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக அமெரிக்காவில் 60 அறைகள் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பைக்காக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அணிக்காக 60 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்றிலே வெளியேறியது. பரம வைரியாக கருதப்படும் இந்திய அணியுடன் தோற்றதை காட்டிலும், முதன்முறையாக டி20 உலகக்கோப்பைக்கு ஆட வந்த அமெரிக்காவுடன் தோற்றது அந்த நாட்டு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது.
60 அறைகள்:
பாகிஸ்தான் அணியின் செயல்பாடு நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரில் மிகவும் மோசமாக இருந்ததால் அவர்களது செயல்பாடுகளை தொடர்ந்து முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டும் தங்குவதற்காக 60 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர், உறவினர்களும் தங்குவதற்காக இந்த அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதே ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறைகளில் சுமார் 26 முதல் 28 குடும்பங்கள் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் வீரர்கள் கண்டனம்:
மூத்த வீரர்களான ஹாரிஷ் ராஃப், ஷதாப்கான், பக்கர் ஜமான், முகமது ஆமீர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் அவர்களது குடும்பத்தினருடன் தங்கியிருந்துள்ளனர். வீரர்கள், அணி நிர்வாகிகள் அல்லாத அவர்களது குடும்பத்தினருக்காக செய்யப்பட்ட செலவுகள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் முக்கிய பந்துவீச்சாளரான முகமது ஆமிர் தன்னுடைய தனிப்பட்ட பயிற்சியாளரை அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதற்கான செலவை அவரே ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்துச் சென்றதுடன், அவர்களுக்காக தனி அறையை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் செலவு செய்ததற்கு முன்னாள் வீரர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். உலகக்கோப்பையின்போது வீரர்கள் குடும்பத்தை அனுமதித்திருக்கக்கூடாது.
அவர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். குடும்பம் உங்களுடன் இருக்கும்போது, உங்களது கவனம் திசை திரும்பும் என்று முன்னாள் வீரர் ஜமான் தெரிவித்துள்ளார். நடப்பு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து மற்றும் கனடா அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.