T20 World Cup: ஒரு ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிக ரன்கள் விளாசிய ஜாம்பவான்கள்; ஒரு பார்வை!
இதுவரை நடந்துள்ள டி20 உலககோப்பையில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இதுவரை நடந்துள்ள டி20 உலககோப்பையில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஐசிசி டி20 உலககோப்பை போட்டித் தொடர் இந்த மாதத்தின் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன. முதலில் தகுதிச் சுற்று போட்டிகளும் அதன் பின்னர் லீக் போட்டிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளன. தகுதிச் சுற்றில் தகுதி பெரும் நான்கு அணிகள் மற்ற எட்டு அணிகளும் இணைந்து சூப்பர் 12 சுற்றில் இருந்து லீக் தொடர் ஆரம்பம் ஆகும்.
2007 முதல் ஐசிசி உலககோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை ஏழு டி20 உலககோப்பை போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. இதுவரை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் தலா ஒரு முறையும் மேற்கு இந்திய அணிகள் இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன.
டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஓவர் போட்டியின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைக்க கூடியதாக அமைந்து விடும். அப்படி போட்டியின் தன்மையையே மாற்றி அமைத்த பேட்ஸ்மேன்களின் பர்ஃபாமென்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
1. யுவராஜ் சிங் (2007)
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இறங்கிய யுவராஜ் சிங் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். போட்டியின் நடுவே இங்கிலாந்து அணி வீரர்களுடன் நடைபெற்ற மோதலால் மிகவும் கோபம் அடைந்த யுவராஜ் சிங், இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய ஓவரின் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார். இதுவரை டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் அடித்ததே ஒரு ஓவரில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
2. ஜெகான் முபாரக் (2007)
இலங்கை அணியின் ஜெகான் முபாரக் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலககோப்பை போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக அவர் ஒரே ஓவரில் 29 ரன்கள் விளாசினார். இதே தொடரில் செப்டம்பர் 14ஆம் தேதி இவர் இந்த சாதனையைச் செய்திருந்தார். ஆனால் அடுத்த ஐந்து நாட்களில் 19ஆம் தேதியே யுவராஜ் சிங் இவரது சாதனையை முறியடித்தார்.
3. ஏ.பி.டிவிலியர்ஸ் (2016)
2016ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஏ.பி. டிவிலியர்ஸ் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையடும் போது ஒரே ஓவரில் 29 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின்னர் வேறு யாரும் தென் ஆப்ரிக்காவின் தரப்பில் இருந்து ஒரே ஓவரில் குறிப்பிடும்படி அதிக ரன்களை டி20 உலககோப்பையில் அடிக்கவில்லை.
4. டேவிட் ஹஸ்ஸி (2010)
ஆஸ்திரேலியா என்றாலே கிரிக்கெடின் ஜாம்பவன்கள் நிறைந்த அணிதான். கோப்பையை வெல்லுகிறதோ இல்லையோ அணியின் வீரர்கள் மிகவும் தாக்கம் நிறைந்த விளையாட்டினை வெளிப்படுத்துவார்கள். அவ்வகையில் 2010ஆம் ஆண்டு நடந்த போட்டியில் டேவிட் ஹஸ்ஸி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 27 ரன்கள் விளாசினார்.
5. கிரிஸ் கெயில் (2009)
எந்த வகை கிரிக்கெட்டாக வேண்டுமானாலும் இருந்தாலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெயிலின் பெயர் இல்லாத பேட்டிங்கிற்கான சாதனைப் பட்டியல் இருக்கவே இருக்காது. யுனிவர்ஸ் பாஸ் எனப்படும் கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 27 ரன்கள் விளாசினார்.
மேற்குறிப்பிட்ட ஐவரும் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கினையே மாற்றியுள்ளனர். இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலககோப்பையில் இந்த சாதனைப் பட்டியலில் மேலும் பலர் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.