Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய கடலூர் விபத்தில், பள்ளி வேனை ஓட்டிய ஓட்டுனர் சங்கர் நடந்தது என்ன என்று விளக்கம் அளித்துள்ளார்.

கடலூரில் சிதம்பரம் அடுத்த செம்மங்குப்பத்தில் இன்று பயணிகள் ரயில் மீது பள்ளி வேன் மோதிய சம்பவத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காலையிலே நிகழ்ந்த இந்த கோர விபத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளி வேன் ஓட்டுனர் சொல்வது என்ன?
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பள்ளி வேன் ஓட்டுனர் சங்கர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்று வரும் வேன் ஓட்டுனர் சங்கரை சந்தித்து அமைச்சர் சிவி கணேசன் ஆறுதல் கூறினார். அப்போது, அமைச்சரிடம் வேன் ஓட்டுனர் சங்கர் கூறியதாவது, ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. அதனாலதான் பள்ளி வேனை இயக்கினேன். ரயில் போய்விட்டது என நினைத்துக்கொண்ட நான் பள்ளி வேனை இயக்கினேன்.
இவ்வாறு அவர் அமைச்சரிடம் கூறினார்.
உயிர் பிழைத்த மாணவன்:
இந்த கோர விபத்தில் பள்ளி மாணவர்களான நிமலேஷ், செழியன் மற்றும் மாணவி சாருமதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி வேனில் பயணித்த மாணவர் விஸ்வேஷ் என்ற மாணவர் மட்டும் உயிர்பிழைத்தார்.

பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் விஸ்வேஷும் இந்த கோர விபத்தின்போது, ரயில்வே கேட் மூடப்படாமலே இருந்தது என்றும், கேட்கீப்பர் பங்கஜ்சர்மா உள்ளே உட்கார்ந்து இருந்தார் என்றுமே பேட்டி அளித்துள்ளார்.
ரயில்வே முரண்பட்ட கருத்து:
ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த கோர விபத்தில் கேட் கீப்பர் கேட்டை மூடிக்கொண்டிருந்த போது, வேன் ஓட்டுனர் வலுக்கட்டாயப்படுத்தியதாலே கேட் திறக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படும் கேட்கீப்பர் பங்கஜ்சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையும், ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ரயில்வே துறையினர் கேட்கீப்பருக்கு சாதகமாக அறிக்கைகளையும், விளக்கங்களையும் அளித்து வரும் நிலையில், பொதுமக்கள் கேட்கீப்பர் பங்கஜ்சர்மா மீதே குற்றம் சாட்டி வருகின்றனர். அவர் மீது சரமாரி தாக்குதலை பொதுமக்கள் நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் உயிரிழந்த சாருமதியும், செழியனும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரின் மகன் மற்றும் மகள் ஆவார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தக்க விசாரணை நடத்தி அலட்சியமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















